பாஜகவில் இணைகிறார் காங்கிரஸை சேர்ந்த மறைந்த பிரபல கன்னட நடிகர் அம்பரிஷின் மனைவி சுமலதா
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நடிகர் அம்பரீஷ் மண்டியா மக்களின் நம்பிக்கையை பெற்றிருந்தார். அவரது மறைவை தொடர்ந்து மனைவி சுமலதா மண்டியா மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு அப்போதைய முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை தோற்கடித்திருந்தார். இந்த தேர்தலில் பாஜக மறைமுகமாக சுமலதாவிற்கு ஆதரவு கரம் நீட்டி இருந்தது. ஆனால் எம்.பி ஆன பிறகு மக்கள் பணிகளை சரிவர செய்யவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சுமலதா பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளார்... தான் மட்டுமல்லாது தனது மகனையும் பாஜகவில் இணைக்க அவர் முயன்று வருவதாகத் தெரிகிறது... மத்தூர் மற்றும் மண்டியா சட்டமன்ற தொகுதிகளில் தானும் தனது மகனும் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு கேட்க சுமலதா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மாா்ச் 12ஆம் தேதி பிரதமா் மோடி மண்டியாவுக்கு வரவுள்ள நிலையில், சுமலதாவின் முடிவு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.