மனைவிக்கு குளிர்பானத்தில் விஷம்... பெண்ணை பிணமாக கொடுத்த மருமகன்..! பரிதவிக்கும் 2 குழந்தைகள்.. கிருஷ்ணகிரியில் பயங்கரம்
- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கானலட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ்.
- இவருக்கும், சில்பா என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
- இந்த நிலையில், கடந்த 19ம் தேதி, சிவராஜ் தனது மனைவிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
- இதனால் உயிருக்குப் போராடிய ஷில்பாவை, உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி ஷில்பா பரிதாபமாக உயிரிழந்தார்.
- இது அவரது உறவினர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- கணவர் சிவராஜ் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் தான் ஷில்பா உயிரிழந்தார் என உறவினர்கள் உறுதிபட குற்றம் சாட்டினர். ஆனால், போலீசார் சிவராஜை கைது செய்யாத நிலையில், ஷில்பாவின் உடல், கணவரின் ஊரான காலட்டிக்கு, இறுதிச் சடங்கிற்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
- அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள், ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அட்டகுறுக்கி என்னுமிடத்தில், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டதாக, ஷில்பாவின் குடும்பத்தினரும் உறவுகளும் கதறி அழுதது காண்போரை வேதனை அடைய வைத்தது.
- தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் உயரதிகாரிகள், ஷில்பாவின் உறவினர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். தலைமறைவான சிவராஜை கைது செய்ய, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
- அதன் பிறகு, ஷில்பாவின் உடலை உறவினர்கள் பெற்று, இறுதிச் சடங்கு செய்தனர்.
- விஷம் கொடுத்ததால் ஷில்பா உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் கூறி வரும் நிலையில், கணவர் சிவராஜ் தலைமறைவாகி இருப்பது, போலீசாரின் மத்தியில், சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திய பின்னரே, ஷில்பாவின் இறப்பில் மறைந்துள்ள ரகசியம் வெளிச்சத்திற்கு வரும்.
Next Story