போராட்டம்.. கலவரம்.. பதற்றம்.. உடனே விரைந்த 4 மாவட்ட எஸ்பிக்கள்- தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது என்ன?
ஒருபுறம் சரமாரியாக கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ள பாதுகாப்பு கேடயத்தை வைத்துக்கொண்டு போலீசார் ஓட்டம் பிடிக்கும் காட்சிகள் இவை..
மறுபுறம்... போலீசார் எங்கு நம்மை பிடித்து விடுவார்களோ என பயந்து தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும் குதித்து ஓட்டம் பிடித்த இளைஞர்கள்...
இப்படி போராட்டம்... பதற்றம்... என கலவர பூமியாக காட்சியளிக்கும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தான் இது.
இதற்கெல்லாம் காரணம், எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து... வெகுண்டெழுந்த இளைஞர்கள் நடத்திய போராட்டமே.
சூளகிரி அடுத்த கோபசந்திரத்தில் எருது விடும் விழாவுக்கு, போலீசார் திடீரென அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், விழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கானோர், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அனுமதி அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தும், எழுத்து பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் போராட்டக்காரர்கள்.
அந்த நேரத்தில் திடீரென சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால்... நிலவரம் கலவரமானது...போலீசார் பலர் படுகாயமடைந்தனர்...
போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும்... தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கூட்டத்தை கலைத்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சேலம் சரக டிஐஜியும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட எஸ்பிக்களும் களத்தில் விசாரணையை தொடங்கினர்.
எருதாட்ட விழாவிற்கு வாகனங்களில் வந்தவர்களையும், மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்தவர்களையும், போலீசார் விரட்டி விரட்டி பிடிக்க ஆரம்பித்ததால் இதை அறிந்த இளைஞர்கள் வேறு வழியின்றி தோட்டங்களிலும், வயல்வெளிகளிலும் குதித்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர்.
பிடிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் வரிசையில் உட்கார வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் யாரையும் கைது செய்யாமல்... அனைவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர், காவல்துறையினர்.