"வீட்டில் ஒருவருக்கு சிறுநீரகத்தில் கல்"... நின்றுபோன கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் - குடிநீர் பிரச்சினையால் குமுறும் மக்கள்
இன்றைய மாவட்ட ஸ்பெஷல் தொகுப்பில், பல ஆண்டு களாக குடிநீருக்காக அவதிப்பட்டு வரும் விழுப்புர மாவட்ட மக்களின் துயரை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
விழுப்புரம் நகராட்சியில் சுமார் 42 வார்டுகளில் லட்சக்கணக் கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களை பல ஆண்டுகளாக விடாது துரத்தி வருவது குடிநீர் பிரச்சனை.
விழுப்புரம் நகராட்சி பகுதியில் தென்பெண்ணையாறு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
அது ஒருபுறமிருக்க, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர், நகராட்சியுடன் பல பகுதிகள் புதியதாக இணைக்கப்பட்டன. ஆனால், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் இன்றளவும் தென்பெண்ணையாற்று குடிநீர் விரிவாக்கம் செய்யப்பட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட வில்லை. இதனால் புதிதாக சேர்ந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
சமீபகாலமாக தென்பெண்ணையாற்றில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அனைத்து தரப்பு மக்களும் குடிநீருக்காக தவித்து வருகின்றனர்.
எப்போதாவது வரும் குடிநீரும் உவர்ப்பாக உள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாவாதாக விழுப்புரம் நகராட்சியின் 36வது வார்டு கவுன்சிலர் கல்யாண சுந்தரம் தெரிவித்தார்.
தவிர விழுப்புரம் புறநகர் பகுதிகளான தந்தை பெரியார் நகர், மஞ்சு நகர், காந்திநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகிக்கப்படும் நீர் உவர்ப்பாகவும், சுண்ணாம்பு படிவங்கள் உள்ளதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 2014ம் ஆண்டு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 2019ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.
ஆனால் தற்போது இத்திட்டத்திற்கும் மாற்றாக மேட்டூர் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் சுமார் 2 ஆயிரத்து 470 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டது. ஆனால் ஒப்புதலுக்காக வாரியத்திற்கு அனுப்பப்பட்ட திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோடை காலங்களில் விழுப்புரம் நகராட்சி மக்களின் துயரம் உச்சத்தை தொடும். குடிநீருக்காக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
நகராட்சிக்கான வரி வசூல் மட்டும் தங்கு தடையின்றி நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய பொதுமக்கள், அதே போல் மக்களுக்கு குடிநீரும் உரிய முறையில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.