இளம்பெண் காரில் கடத்தி வன்கொடுமை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம் பதிவு செய்யாதது ஏன்? - உயர் நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி

x

பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்து 20 நாள்களாகியும் வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என்று காவல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாமணி என்ற பெண், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவொன்றைத் தாக்கல் செய்தார். அதில், கடந்த மாதம் 4-ஆம் தேதி தனது தங்கையை சிலர் காரில் ஏற்றிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தபோது, நத்தம் காவல் நிலையத்துக்கும், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் அலைக்கழித்து, இறுதியாக வழக்குப் பதிவு செய்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மதுரை ஊமச்சிகுளம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள தனது தங்கையை சந்திக்க அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் ரமேஷ் ஆனந்த், வெங்கடேஷ் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்தப் பெண்ணை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை அவருடைய விருப்பத்தின்பேரில், சகோதரியுடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்தனர். மேலும், பாலியல் குற்றச்சாட்டு குறித்து, 20 நாட்களாக வழக்குப் பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து தென்மண்டல காவல்துறை தலைவர், மதுரை மற்றும் திண்டுக்கல் காவல் துறை கண்காணிப்பாளர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்