சிகிச்சை அளித்து குற்றமா..? நெஞ்சில் இறங்கிய கத்தரிக்கோல்... பெண் மருத்துவரை குத்திக்கிழித்த கொடூர குடிகாரன் இந்தியாவையே அதிர வைத்துள்ள சம்பவத்தின் பின்னணி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி, செவிலியர்களுடன் தகராறில் ஈடுபட்டு பெண் மருத்துவரை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
மது போதையால் பல குடும்பங்கள் சீரழிந்து அல்லல் பட்டு வரும் வேளையில், தன்னுடைய மது பழக்கத்தால் ஆசிரியர் பணியை இழந்து...
தொடர் தகராறால் குடும்ப உறவுகளின் நிம்மதியை கெடுத்து...அநியாயமாக பெண் மருத்துவர் ஒருவரை கொடூர கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
கேரளா மாநிலம் கொட்டாரக்கரை அருகே பூயப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தீப். அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த வந்த இவர், மதுவுக்கு அடிமையாகி தொடர்ந்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட வந்ததால் பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்...
தொடர்ந்து குடும்பத்தில் தகராறு செய்தும், தெருவில் வசிப்பவர்களுக்கு தொடர் தொல்லைகள் கொடுத்து வந்த இவர், இதனால் ஏற்பட்ட மோதலில் புகாரின் அடிப்படையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்...
சந்தீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அவரது உடலில் ஏற்பட்ட காயங்களுக்காக கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்...
ஆரம்பத்தில், அமைதியாக சிகிச்சை பெற்று வந்த சந்தீப், பின்பு செவிலியர்களுடன் தகராறில் ஈடுபட்டு தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்துள்ளார்...
சந்தீப்பின் தகராறால் மருத்துவமனை வளாகமே பரபரப்பான நிலையில், சந்தீப்புடன் வந்திருந்த ஒரே ஒரு காவலரும் அவருடைய தகராறை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய நிலையில், அந்த காவலரையும் சந்தீப் தாக்கியதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்...
நடப்பதையெல்லாம் கண்டு ஆத்திரமடைந்தும், சக நோயாளிக்கு தொடர் இடையூறு விளைவிப்பதை கண்டும் கோபத்தில் இருந்த இளம் பெண் மருத்துவர் வந்தனா தாஸ் சந்தீப்பை தட்டிக்கேட்டிருக்கிறார்....
தான் என்ன செய்கிறோம் என்ற சுய உணர்வில்லாமல் நிலை மறந்து கொடூரனாக மாறிப்போயிருந்த சந்தீப், தன்னை தட்டிக்கேட்ட வந்தனா தாஸை மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் கத்தரிக்கோலால் குத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது....
உடனே, வந்தனா தாஸை மீட்டு மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்த நிலையில், சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது....
23 வயதே ஆன வந்தனா தாஸ், சிறு வயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்று லட்சியம் கொண்டு, அதில் இளம் வயதிலேயே வெற்றியும் பெற்ற நிலையில், ஏழைகள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு தொடர்ந்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார்...
கோட்டயத்தை சேர்ந்த இவரின் குடும்பம் மகளின் மருத்துவர் பணிக்காக கொட்டாரக்கரைக்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள்...
மருத்துவர் மட்டுமில்லாமல் சமூக சார்ந்த விஷயங்களிலும் ஆர்வமும், அக்கறையும் கொண்டு சமூக ஆர்வலராகவும் வாழ்ந்து வந்த வந்தனா தாஸ், தன் கண் முன்னே நடக்கும் அநியாயங்களை எதற்கும் பயப்படாமல் துணிவுடன் கேட்பவர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...
இந்த துயர சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சந்தீப்பை சிறையில் அடைத்த போலீசார், சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு மாநில உயர்நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மருத்துவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தால் கொந்தளிப்பில் இருக்கிறது கேரளா. பணியிடத்தில் பெண் மருத்துவர் கொல்லப்பட்டது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்...