மாறி மாறி சண்டையிட்டு கொள்ளும் கர்நாடகா - மகாராஷ்டிரா - ஒரு மாவட்டத்தால் கிளம்பிய பிரச்சனை
கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தை, மகாராஷ்டிர மாநிலமும் உரிமைகோரி வருவதால், இரு மாநிலங்களுக்கு இடையே பூசல் நிலவிவருகிறது.
ஒரு வாரமாக இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. கர்நாடகத்தில் இரண்டு நாள்களாக மகாராஷ்டிர பதிவு கொண்ட பேருந்துகள் உள்பட்ட வாகனங்கள் தாக்கப்பட்டன.
கர்நாடக முதலமைச்சர் பொம்மையே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று காட்டமாகக் கூறினார்.
இந்த நிலையில், மத்திய அரசின் ஆதரவில்லாமல் இப்படியான தாக்குதல் நடக்க வாய்ப்பு இல்லை என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
அவருடைய கட்சியினரும், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையும் புனே மாவட்டத்தில் கர்நாடக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகப் பேருந்துகள் மீது மை பூசியதுடன், ஜெய் மகராஷ்டிரா என்றும் எழுதி எதிர்ப்பைக் காட்டினர்.