"யாருங்க இந்த அம்மா.."...நாட்டின் புருவத்தையே உயர செய்த பெண் - காங்., பாஜகவை அலறவிட்ட சுயேச்சை
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவையும் தாக்கல் செய்து வருகிறார்கள். தேர்தல் களத்தில் கோடீஸ்வர வேட்பாளர்கள் நிரம்பி வழிகிறார்கள்.
பெங்களூரு சிக்பேட்டை தொகுதியில் காங்கிரசில் போட்டியிட சீட் கேட்டுவந்த கே.ஜி.எப். பாபு, தனது மனைவி சஜியா தரணத்தை சுயேச்சையாக களம் இறக்கி உள்ளார். அவர்களது பெயரில் ஆயிரத்து 662 கோடி சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காட்டி இருக்கிறார். சாஜியா, கர்நாடக பணக்கார வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஒசக்கோட்டை தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கியிருக்கும் மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எம்.டி.பி. நாகராஜ், தனது சொத்து மதிப்பு ஆயிரத்து 609 கோடி என தெரிவித்துள்ளார். தனது மனைவியிடம் 2 கிலோ 879 கிராம் தங்க நகைகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் 98.36 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.
எம்.டி.பி நாகராஜ் கடந்த 2019 ஆம் காங்கிரசிலிருந்து பாஜகவுக்கு அணி தாவியவர். அவரது சொத்து மதிப்பு 390 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. 2020 எம்.எல்.சி. தேர்தலில் தனது சொத்து மதிப்பு ஆயிரத்து 220 கோடி என தெரிவித்திருந்தார்.
கனகபுராவில் போட்டியிடும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், தனக்கும், தனது மனைவிக்கும் ஆயிரத்து 414 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இருவருக்கும் 200 கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுவே 2018-ல் தாக்கல் செய்த மனுவில் தனது சொத்து மதிப்பு 840 கோடி ரூபாய் என தெரிவித்திருந்தார்.