அப்பா இறந்தது கூட தெரியாமல்.. 3 கிமீ தூரம் தோளில் சுமந்து சென்ற மகன்.. கருணையற்ற வெள்ளத்திற்கு நடுவே பாச போராட்டம்

x

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதிய சாலைவசதி இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை மகன் தோளில் தூக்கி சென்ற நிலையில், செல்லும் வழியிலே தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மலைக்கிராமம் கோலஞ்சி. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த கிராமத்தில் கும்பாறு பாய்ந்து செல்வதால், அந்த ஆற்றை கடக்க போதிய மேம்பால வசதியும், சாலை வசதியும் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கிராமத்தை சேர்ந்த வேலுபாண்டி என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து, தந்தையின் நிலை மோசமானதை அடுத்து அவரது மகன் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு வேலுபாண்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இனிமேலாவது எங்கள் கிராமத்திற்கு ஆற்றை கடந்து செல்ல பாலமும், போதிய சாலை வசதியும் செய்து தருமாறு சோகத்துடன் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்