விபத்தில் டிரைவர் தலையில் சிக்கிய இரும்பு... அப்படியே தையல் போட்ட டாக்டர்கள் - அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
ஆம்பூர் அருகே, விபத்தின் போது ஓட்டுநரின் தலையில் சிக்கிய இரும்பு நட்டை அகற்றாமல், வேலூர் அரசு மருத்துவமனையில் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் அகரம்சேரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தலை மற்றும் தாடை பகுதியில் தையல் போடப்பட்டது. இதனிடையே, அரியூர் மலைக்கோடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கார்த்திகேயன் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில், கார்த்திகேயன் தலையில் சிக்கிய இரும்பு நட்டை அகற்றாமல் அரசு மருத்துவர்கள் தையல் போட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையறிந்த உறவினர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் இது குறித்து கேட்டதற்கு, உரிய பதில் அளிக்கவில்லை என, கூறப்படுகிறது. பின்னர், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் சென்ற நிலையில், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என, உறுதி அளித்தார்.