“அவமதித்த பாஜக தலைமை..கர்நாடக தெருக்களில் எடியூரப்பாவின் கண்ணீர்“ -டி.கே.சிவகுமார் பரபரப்பு கருத்து..!
கர்நாடக தேர்தலையொட்டி தனியார் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துக்கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய சிவகுமார், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் எனவும் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்கும் சூழலில், எடியூரப்பாவை பாஜக அவமதித்துவிட்டதாக கூறியிருக்கும் சிவகுமார், எடியூரப்பாவுக்கு கட்சி தலைமையும், விசாரணை முகமைகளும் அழுத்தம் கொடுத்திருப்பதாகவும், அவரது கண்ணீர் கர்நாடக தெருக்களில் பாய்வதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் வென்றால் முதல்வர் அரியணைக்கான போட்டியில் இருக்கும் அவரிடம் இதுதொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட போது, கட்சி தலைமை முடிவு செய்யும் எனக் குறிப்பிட்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்யாதது குறித்து பேசியிருக்கும் அவர், தாங்கள் மாநில பிரச்சினைக்காக போராடுகிறோம் என்றவர், பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் மாநிலத்தை ஆள முடியாது என்றார்.