பொய்த்து போன இந்திராவின் நம்பிக்கை - இந்திய வரலாற்றை மாற்றியமைத்த அந்த நாள் இன்று
1917ல் பிறந்த இந்திரா காந்தி, தனது தந்தை ஜவஹர்லால் நேருவை பின்பற்றி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1959ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டர். 1964ல் மத்திய தகவல் ஒலிப்பரப்புத் துறை அமைச்சரான இந்திரா, 1967 ஜனவரியில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1980களில் பஞ்சாப் பிரச்சனை தீவிரமடைந்தது. சீக்கிய இன மக்களுக்கு தனி நாடு கோரி, பிந்திரன்வாலே தலைமையில் தீவிரவாத இயக்கம் ஒன்று உருவாகி அரசியல் படுகொலை கள், குண்டு வீச்சு தாக்குதல்களில் ஈடுப்பட்டனர். சீக்கியர்களின் புனித தளமான அமிர்தசரஸ் பொற்கோயிலை பிந்திரன்வாலே இயக்கத்தினர் ஆக்கிரமித்து, தங்களின் கோட்டையாக மாற்றினர். ஏராளமான ஆயுதங்களையும், குண்டுகளையும் அதில் சேகரித்து வைத்தனர்.
1984 ஜூனில், பொற்கோயிலை மீட்க, இந்திய ராணுவம் நடத்திய முற்றுகை தாக்குதலில், சுமார் 400 சீக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பொற்கோயிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிகழ்வையொட்டி, இந்திராகாந்திக்கு கண்டனங்கள் குவிந்தன. தொடர்ந்து இந்திரா காந்தியின் மெய் காவல் படையில் இருந்த சீக்கிய ராணுவ வீரர்களை நீக்க, உளவுத் துறை பரிந்துரை செய்தது. ஆனால் இந்திரா காந்தி அதற்கு உடன்பட மறுத்து விட்டார். சீக்கிய மெய்காவலர்களின் விசுவாத்தை சந்தேகிக்க
மறுத்தார். ஆனால் அடுத்த சில மாதங்களில், அவரின் நம்பிக்கை பொய்த்து போனது. அவரின் சீக்கிய மெய்காவலர்கள் இருவர், அவரின் வீட்டு தோட்டத்தில் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றனர்.
இதைத் தொடர்ந்து, வட இந்தியா முழுவதும் சீக்கியர்களின் வீடுகள், கடைகள் தாக்கப்பட்டன. சுமார் 8,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த பிரதமராக பதவியேற்ற ராஜீவ் காந்தி, கலவரத்தை அடக்க ராணுவத்தை வரவழைத்தார்.
இந்திய வரலாற்றை மாற்றியமைத்த இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினம், 1984 அக்டோபர் 31.