இந்தியா டூ இலங்கை.. ரகசியமாக நடந்த விஷயம்.. அம்பலப்படுத்திய ஆந்திர போலீஸ்
திருப்பதி சூளூர்பேட்டை அருகே ஆந்திர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சென்னை நோக்கி வந்த சரக்கு வாகனம் சோதிக்கப்பட்டது. அப்போது வாகனத்தின் அடிப்பகுதியில் ரகசிய அறைகளை அமைத்து அவற்றில் கஞ்சா பொட்டலங்களை வைத்து கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் கால் டன் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றிய காவல் துறையினர், தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 8 பேரைக் கைது செய்தனர். விசாரணையில் ஆந்திரா அனக்கா பள்ளியைச் சேர்ந்த அப்பள நாயுடு, ஒடிசாவில் இருந்து அனக்கா பள்ளிக்கு கஞ்சா கடத்தி வந்து அங்கிருந்து மேற்கண்ட 8 பேர் மூலம் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, வேதாரண்யம் ஆகிய கடலோர பகுதிகள் வழியாக படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தி செல்வதை தொழிலாக செய்து வந்துள்ளார்.
இலங்கையில் அவற்றை பெற்றுக் கொள்ளும் காதர் பாய் என்பவர், அப்பளநாயுடு அனுப்பி வைக்கும் கஞ்சாவை விற்று அதற்கு பதிலாக தங்க கட்டிகளை அப்பள நாயுடுவுக்கு அனுப்பி வைப்பார். இந்த சட்ட விரோத கடத்தல் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆந்திர போலீசாரால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் அப்பள நாயுடு, காதர்பாய் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக காதர்பாயை கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன