கணவனை இழந்த பெண் கழுத்தறுத்து கொலை.. 11 வயது மகன், கைக்குழந்தையை கூட விட்டு வைக்காத கொடூரம் - கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி
கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியைச் சேர்ந்த வளர்மதி என்பவர், அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். 10 மாதங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்ட நிலையில், வளர்மதி தனது 11 வயது மகன் தமிழரசன், எட்டு மாத கைக்குழந்தை கேசவன் ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். இரண்டு நாட்களாக அவர்களின் வீட்டை விட்டு யாரும் வெளியே வராத நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர், கள்ளக்குறிச்சி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். வளர்மதியின் வீட்டுக்கு வந்த போலீசார், உள்ளே சென்று பார்த்தபோது, வளர்மதியும் அவர்களின் 2 மகன்களும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், படுகொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.