அதிகரிக்கும் முறையற்ற உறவுகள்... மனிதர்கள் போலவே பறவைகளும் 'விவாகரத்து'..! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

x

மனிதர்களை போலவே பறவைகளும் தனது இணைகளை விவாகரத்து செய்யும் என வெளியாகியுள்ள ஆய்வின் தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பறவைகள் விவாகரத்து குறித்த சுவாரஸ்ய செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

லவ் பேர்ட்ஸ் போல் சுற்றித்திரிந்த காதலர்களும், கணவன் மனைவியும் மனக்கசப்பு, கருத்து வேறுபாடு, தகாத உறவு போன்ற காரணங்களால் பிரிந்து வாழ்வதுண்டு.

ஆனால், காதலின் அடையாளமாக பார்க்கபடும் ஜோடி பறவைகள், விவாகரத்து செய்து பிரியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா ? நம்ப முடியவில்லை என்றாலும் அது தான் உண்மை என்கின்றனர், ஆராய்ச்சி யாளர்கள்.

இனப்பெருக்க காலத்தில் ஒரு பறவையுடன் ஜோடி சேரும் பறவை, மற்றொரு இனப்பெருக்க காலத்தில் தனது ஜோடி உயிருடன் இருந்தாலும் வேறொரு பறவையுடன் இணை சேர்வதை பறவைகள் இடையேயான விவாகரத்து என்று அழைக்கின்றனர்.

இந்த பிரிதலுக்கு காரணம் மனிதர்களை போலவே, தகாத உறவு, இடம்பெயர்தலின் தூரம் போன்றவை என ஆச்சரியப் படுத்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இவை அனைத்தும் கணிக்கப்பட்டவை அல்ல, சுமார் 232 பறவை இனங்களின் தரவுகளை ஆய்வு செய்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

சீனா மற்றும் ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளது ராயல் சொசைட்டி பி என்ற இதழ்.

அதில் பறவைகளுக்குள் ஏற்படும் விவாகரத்தில் ஆண் பறவையின் பங்கு அதிகப்படியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தனது இணையை தவிர்த்து மற்ற பெண் பறவைகளுடன் உறவு வைத்து கொள்வது, அந்த ஆண் பறவை மீதான ஈர்ப்பை குறைக்கிறது. இதனால் பொறுப்பற்ற ஆண் பறவையை பெண் பறவை பிரிந்து சென்று வேறு துணையை தேடிக்கொள்கிறது.

இடம்பெயர்தலில் நீண்ட நெடிய பயணம் மேற்கொள்ளும் பறவைகளுக்கு விவாகரத்து அதிகளவில் நடைபெறுகிறது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பறவைகளில் ஒரு பறவை முன்னதாக சென்று விட்டால், தனது துணைக்காக காத்திருக்காமல் அப்பறவை வேறு துணையை தேடிக்கொள்ளும்.

கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகளால் கூட பறவைகள் இடம்பெயர்தலில் தாமதம் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் படி, ப்ளோவர்ஸ் (Plovers), ஸ்வாலோஸ் (swallows), மார்டின்ஸ் (Martins) ஓரியோல்ஸ் (orioles) மற்றும் பிளாக்பேர்ட்ஸ் (blackbirds) ஆகிய பறவை இனங்கள் அதிக விவாகரத்து விகிதங்களை கொண்டுள்ளன.

அதே நேரம் குறைந்த விவாகரத்து செய்யும் பறவை இனங்களில் பெட்ரல்கள் (petrels), அல்பாட்ரோஸ்கள் (albatrosses) வாத்துக்கள் மற்றும் ஸ்வான்ஸ் அன்னப்பறவை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

காலநிலை மாற்றத்தால் இது போன்ற விவாகரத்து க்கள் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்