மகளிருக்கு மாதம் ரூ.1000 - - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம், கள ஆய்வு அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பப் பதிவு முகாம் நேரம், காலை 9:30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடத்தப்பட வேண்டும் எனவும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கூட்ட நெரிசலைத் தவிர்த்து விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கு 10 நாட்கள் முதல் 12 நாட்கள் வரை போதிய கால அவகாசம் வழங்க வேண்டும், கடைசி இரண்டு நாட்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நாளில் வர இயலாத பயனாளிகள், விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்க வேண்டும், மாவட்டம் மற்றும் வட்டத்தில் உள்ள பணியாளர்கள், இருப்பில் உள்ள பயோமெட்ரிக் சாதனங்கள், கண்காணிப்பு அலுவலர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து விண்ணப்பப் பதிவு முகாம்களின் கால அட்டவணையை நிர்ணயம் செய்ய வேண்டும்,கள ஆய்வுக் குழுவில் உள்ள அலுவலர்கள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று திட்டம் குறித்து விளக்கம் அளித்துக் தகுதிச் சரிபார்ப்புப் படிவத்தில் கேட்கப்படும் கேள்விகளைக் கேட்டு உரிய ஆவணங்களைச் சரி பார்த்துக் கைப்பேசிச் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணக்கெடுப்புச் செய்ய வேண்டிய வீடுகளின் எண்ணிக்கை கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்கப்படும் எனவும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.