கள்ளக்காதலியுடன் சேர்ந்து போட்ட கொலை பிளானில் தானே இரையான இளைஞர் - கல்குவாரி தண்ணீரில் மிதந்த சடலம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்டு கல்குவாரி தண்ணீரில் தூக்கி வீசிய சம்பவத்தில் கள்ளக்காதலி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜிலியம்பாறை அருகே மலவாடி நாயக்கனூர் பகுதியில் உள்ள கல்குவாரி தண்ணீரில் நேற்று முன்தினம் ஒரு ஆணின் பிணம் மிதந்து கொண்டிருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் திருச்சி மாவட்டம் கருங்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மணி என்பது தெரியவந்தது. மணிக்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்த கரூரை சேர்ந்த மூக்காயி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில், மூக்காயுடைய மற்றொரு கள்ளக்காதலன் பாலசுப்பிரமணி தான் கொடுத்த 10 லட்சம் ரூபாய் பணத்தை அவரிடம் திருப்பி கேட்டுள்ளார். இதனால் மணியின் உதவியுடன் மூக்காயி பாலசுப்பிரமணியை கொல்ல திட்டம் தீட்டிய நிலையில், மூக்காயி - மணியின் கள்ளக்காதல், கொலைத் திட்டம் உள்ளிட்டவை பால சுப்பிரமணிக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து தான் பணம் தருவதாக மூக்காயிடம் தெரிவித்த பாலசுப்பிரமணி, மணியை கரூருக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். ஏற்கனவே போட்ட திட்டத்தின் படி பாலசுப்பிரமணியின் தரப்பினர் கரூரில் மணிக்கு மது வாங்கி தந்து வேனில் குஜிலியம்பாறை அழைத்து வந்து அங்குள்ள வீடு ஒன்றில் கை கால்களைக் கட்டிப் போட்டு, தாக்கி, மலவாடிநாயக்கனூர் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு தூக்கிச் சென்று, அங்கு மணியை கழுத்தை அறுத்து கொலை செய்து கல்குவாரியில் தூக்கி வீசி தப்பியுள்ளனர். இதையடுத்து போலீசார் மூக்காயி, பாலசுப்பிரமணி, அவரது மகன் பரத்ராஜ், உறவினர் சுரேஷ் ஆகிய 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.