“நான் உன்னை விட்டு போக மாட்டேன்“ - கிளிகள் நடத்திய பாசப்போராட்டம்... கண்ணீர் வர வைக்கும் காட்சிகள்
பாதுகாக்கப்பட்ட பறவையாக கிளிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுரையில், வீடு வீடாகச் சென்று கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிளிகளை வளர்த்த உரிமையாளர்கள், கண்ணீர் விட்டபடி அவற்றை போலீசாரிடம் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு..
வளர்ப்பினங்களிலேயே தனித்துவம் வாய்ந்தது கிளி... மற்ற வளர்ப்பு பிராணிகளுக்கு இல்லாத ஒரு சிறப்பினம் இதற்கு உண்டு...
வளர்ப்பவரை பிடித்து விட்டால் போதும், இது செய்யும் குறும்புத்தனம், சுட்டிப் பையன் போல இருக்கும்...
குடும்பத்தில் நானும் ஒருவன் என... வளர்ப்பவர்களுடன் உரிமை கொண்டாட துடிக்கும்... கிளிக்கே இப்படி ஒரு உரிமை இருக்கும்போது, அதனை வளர்த்தவர்களுக்கு அதனை விட்டு பிரிய மனம் வருமா என்ன?
ஆனால்... மனம் வரத்தான் வேண்டும்? என சொல்கிறது தற்போதைய சட்டம்...
தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022 இன் படி, கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிளிகளை வளர்ப்பதும், வைத்திருப்பதும், விற்பனை செய்வதும் தண்டனைக் குற்றம் என சட்டம் சொல்கிறது...
இதன் எதிரொலியாக, மதுரையில் வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஒப்படைக்க வேண்டும் என வனத்துறை போலீசார் வீடு வீடாக படையெடுத்துதான் ஆச்சரியம்...
மதுரை பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்த போலீசார், வரும் 17ம் தேதிக்குள் கிளிகளை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
அதன்படி, போலீசார் வீடு வீடாகச் சென்று சோதனை செய்தனர். தங்களது வீடுகளில் ஒரு குடும்பத்தினராக வலம் வந்த கிளியை, கொடுக்க மனமில்லாமல் சிலர் கண்ணீரில் நனைந்தபடி கொடுத்தது வேதனை அளித்தது.
"ரொம்ப கஷ்டமா இருக்கு சார்"
"என் கிளி பெயர் 'அபி'"
"என்கிட்ட என் கிளி பேசும்"
"எது வச்சாலும் சாப்பிடும் என் கிளி"
"நான் உனக்குத்தான் சொந்தம், வேறு யாரிடமும் என்னை கொடுக்காதே" என... கிளி ஒன்று இளைஞனின் முதுகில் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு ஆட்டம் காட்டியது...
ஆனாலும் "வேறுவழியில்லை நீயும் நானும் பிரியும் நேரம் வந்துவிட்டது" என வளர்த்தவர் நினைத்தபோது, அவரது மனதின் ஒலியை கேட்ட கிளி அதிர்ச்சி அடைந்து, அவரது வீட்டிற்கே பறந்து சென்று வியப்பை அளித்தது.
என் பிள்ளை போல வீட்டில் இருந்தது... என்ன செய்வது... கொஞ்ச நாள் கஷ்டமாத்தான் இருக்கும் என... கிளியை வளர்த்த ஆட்டோ ஓட்டுநரின் உதடு மட்டும் அசைந்தது உள் மனதின் வலியையும் உணர வைத்தது.
"3 வருஷமா என் கூட வளர்ந்தது"
"என் புள்ள மாதிரி இருந்துச்சு"
"கொஞ்சநாள் கஷ்டமா இருக்கும்"
"செல்லப்பிள்ளை மாதிரி இருந்து வந்துச்சு"
எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பது போல, தானாக வந்தவன் தானாகவே சென்றுவிட்டான் என்ற ஆதங்கத்திலேயே கிளியை வளர்த்தவர்கள் அடுத்த நொடியை கடந்து வருகின்றனர்...