“இந்திய அணி கேப்டன் நான்தான்“... கலெக்டர், பிரபலங்களை சந்தித்து வாழ்த்து - மோசடிகள் பல விதம்... இது ரொம்பவே புதுவிதம்!

x

கிரிக்கெட்டில், பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று வந்ததாக, கடையில் வாங்கிய கோப்பையை காட்டி முக்கிய பிரமுகர்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றிய பலே ஆசாமியின் தில்லுமுல்லு சம்பவத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

கடையில் வாங்கி வந்த கோப்பையை காட்டி, போட்டியில் வென்றதாக நடிகர் வடிவேலு திரைப்படத்தில் புரூடா விடும் காட்சியை போன்றே, நிஜத்திலும் அரங்கேறியிருக்கிறது ஒரு சம்பவம்...

அதிலும், சாமானியன் முதல் முதலமைச்சர் வரை நம்ப வைத்து, பலே ஆசாமி ஏமாற்றியதுதான் இதில் ஹைலைட்.

தமிழகத்தில் அனைவரையும் கவர்ந்த விளையாட்டாக கிரிக்கெட் இருக்கும் நிலையில், அதே கிரிக்கெட்டை பயன்படுத்தி, ஜகஜால கில்லாடியாக வலம் வந்துள்ளார் ராமநாதபுரம் மாவட்டம் கீழச்செல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் பாபு.

கால்கள் ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான இவர், வீல் சேர் கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டன் என்றும்,

கராச்சியில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், தனது தலைமையில் இந்திய அணி வென்று கோப்பையை வாங்கியதாகவும் கூறி, தனது மாயாஜால பேச்சால், அனைவரையும் நம்பவைத்துள்ளார் வினோத்பாபு.

பெரும்பாலும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியினை, பரவலாக யாரும் பார்ப்பதில்லை என்பதால், அதனைப் பயன்படுத்தி, பல புரூடாக்களை அள்ளிவிட்டுள்ளார் அவர்...

ஆசிய கிரிக்கெட் போட்டியில் வென்றதாக போலி கோப்பையை காட்டி, ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து, சற்றும் கூசாமல் வாழ்த்து பெற்ற வினோத்பாபு, ஒரு படி தாண்டி, இந்த திறமைக்கு பேர் போன எனக்கு, ஒரு அரசு வேலை வழங்க வேண்டாமா? எனவும் அவர்களிடம் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், மார்ச் 26 ஆம் தேதி, லண்டனில் வீல் சேர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பதாகவும், தன்னுடைய தலைமையில் இந்திய அணி கலந்து கொள்வதாகவும் கூறி, பல வணிக நிறுவன உரிமையாளர்கள் என முக்கிய பிரமுகர்களை குறிவைத்து ஒரு Attendance-ஐ போட்ட வினோத்பாபு, பண உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

உருட்டலுக்கு மேல் உருட்டலாக, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றதாக, வழக்கம்போல், மீண்டும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாழ்த்து மழையில் நனைந்துள்ளார் வினோத் பாபு.

அந்த கோப்பையுடன் நேராக தலைமைச் செயலகத்திற்கு விறுவிறுவென சென்ற அவர், அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து வாழ்த்து பெற, அதனை நம்பிய அமைச்சரும் வினோத்பாபுவை முதலமைச்சரிடம் அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி, பாராட்டுகளும் குவிந்தன.

இதன் பிறகுதான் நமது உளவுத்துறைக்கு வினோத்பாபு குறித்து ஓர் ரகசிய தகவல் வந்திருக்கிறது. அதையடுத்து வினோத் பாபுவிடம் போலீசார் விசாரித்தபோது, அவரிடம் பாஸ்போர்ட்டே இல்லை என்பது தெரியவந்தது. பாஸ்போர்ட்டே இல்லாத ஒரு நபர், எப்படி வெளிநாட்டிற்கு சென்று கிரிக்கெட் விளையாட முடியும் என யோசிக்கும்போதுதான் வினோத்பாபுவின் குட்டு அனைத்தும் வெளிப்பட்டுள்ளது.

இதனை அறிந்த உண்மையான வீல் சேர் கிரிக்கெட் அணியினர், வினோத் பாபு மீது ராமநாதபுரம் எஸ்.பியிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மோசடிகள் பல விதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்... ஆனால், இது ரொம்பவே புதுவிதம்!



Next Story

மேலும் செய்திகள்