அம்மாவுக்கு ஆதரவாக பேசிய கணவன் - 5 மாத கர்ப்பிணி கடலில் குதித்த சோகம்
ஆந்திரா மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் கஜுவாக்கா பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். சாப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கு கடந்த ஆண்டு சுவேதா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில், சுவேதா 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பணி நிமித்தம் காரணமாக மணிகண்டன் ஐதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த சுவேதாவுக்கும், அவரது மாமியாருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், தனது கணவனுக்கு போன் செய்த சுவேதா நடந்த தகராறை கூறிய நிலையில், மணிகண்டன் அவரது தாய்க்கு ஆதரவாக பேசியதாக தெரிகிறது, இதனால் ஆத்திரமடைந்த சுவேதா விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்று, கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புகாரின் அடிப்படையில் சுவேதாவை தேடி வந்த போலீசார், கடற்கரையில் சடலமாக மிதந்த சுவேதாவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, சுவேதாவின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், அவரது அறையில் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், கணவனை குறிப்பிட்டு "அனைத்திற்கும் நன்றி, உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்" என எழுதப்பட்டிருந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.