மண்ணில் புதையுண்டு கிடந்த மனித எலும்புக்கூடுகள், மென்மேலும் மர்மத்தை உண்டாக்கும் முல்லைத்தீவு
கடந்த 2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்த யுத்தம் உச்சத்தை எட்டியிருந்த நேரத்தில், தமிழ் மக்கள் தாங்கள் வாழ்ந்த பகுதியில் இருந்து இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது. போர் முடிந்து 5 ஆண்டுகள் கழித்துதான் தமிழ்மக்கள் மீண்டும் அங்கே குடியேற தொடங்கினர். அவ்வப்போது சரணடைந்த விடுதலைப்புலிகள் பற்றிய கேள்விகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில்தான் முல்லைத் தீவில் விடுதலைப்புலிகளின் உடைகளும், பெண்களின் உள்ளாடைகளும், மனித எலும்புகளும் கண்டறியப்பட்டிருக்கிறது...
முல்லைத்தீவில் உள்ள கொக்கிளாய் என்னுமிடத்தில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த, குழாய் பதிக்கும் வேலைகள் நடந்து வந்தது. அதற்காக தோண்டப்பட்ட குழியில்தான் தற்போது சர்ச்சை வெடித்து கிளம்பியுள்ளது..... ஏனெனில் தோண்டிய குழியில் விடுதலைப்புலிகளின் சீருடைகளும், பெண்களின் உள்ளாடைகளும், மனித எலும்பு கூடுகளும் கிடந்துள்ளன. அதிர்ச்சியடைந்த வேலையாட்கள், நகர நிர்வாகத்திடம் இதைப்பற்றி தெரிவிக்க, குழிகளில் கிடந்த மனித எச்சங்களை பார்த்துவிட்டு குழாய் பதிக்கும் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டனர்....
இறுதி யுத்த நேரத்தில் பல விடுதலைப்புலிகளும், தமிழ் மக்களும் காணாமல் போனதாக அவ்வப்போது பெயர் பட்டியல்கள் வெளியாகின. தற்போது வரை இவர்கள் உயிர் பிழைத்திருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. அதே நேரத்தில் சரணடைந்த விடுதலைப்புலிகளை கொலை செய்து புதைத்திருக்கலாம் என்ற செய்தியும் தமிழர்கள் வாழும் பகுதியில் உலாவிக்கொண்டிருக்கிறது. தற்போது கிடைத்திருக்கும் இந்த மனிதப் புதைகுழி எச்சங்கள் கூட பெண் போராளிகளை கொலை செய்து புதைத்தாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகப்படுகின்றனர்
விடுதலைபுலிகளின் தலைநகரான முல்லைத்தீவில்தான் போர் உக்கிரகமாக நடந்து முடிந்தது. அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில், பல மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன. வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், இது விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான உடைகள் என உறுதிபடுத்தியுள்ளார். தற்போது நீதிமன்றம் இந்த விசயத்தில், தலையிட்டு தடயங்களை பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ள நிலையில், அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது. அவ்வப்போது, மனித எச்சங்கள் வெளிவந்து, மனதை உலுக்கிக் கொண்டிருக்க, உண்மை வெளிச்சத்திற்கு வருமா என இலங்கை தமிழ் மக்கள் காத்திருக்கின்றனர்.....