ரயிலை தானாக நிறுத்தும் கவச் சிஸ்டம் செயல்படுவது எப்படி?

x

விபத்தில்லா பயணம் என்பதில் நீண்டகாலமாக இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது. இதில் தொழில்நுட்பம் வடிவில் வந்தது கவச் பாதுகாப்பு சிஸ்டம். முற்றிலும் உள்நாட்டிலே உருவாக்கப்பட்டது. இரு ரயில்கள் மோதலை தவிர்க்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது. ரயில் தண்டவாளத்தில் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியிலும், யார்டு, ரயில் எஞ்ஜின் மற்றும் ரயில் சக்கரத்தில் பொருத்தப்படும் கருவிகள் அதிர்வெண் ரேடியோ தகவல்தொடர்பு மூலமாக தகவலை கடத்தி விபத்தை தடுக்கிறது.....

ரயில் செல்லும் பாதை அடையாளம் காணப்படுகிறது, ரயில்களின் இருப்பிடம் மற்றும் ரயில் செல்லும் திசை அடையாளம் காணப்படுகிறது. ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வரும்போது தகவல் ரயில் ஓட்டுநர்களுக்கு தெரிவிக்கப்படும்.ஓட்டுநர்கள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், ரயிலை கவச் நிறுத்திடும். 2022 மார்ச்சில் செகந்திராபாத்தில் கவச் தொழிநுட்ப பரிசோதனையில் வெற்றி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விபத்தில்லா பயணத்திற்கு பெரும் துணையாக இருக்கும் என சொல்லப்பட்ட கவச் இப்போது ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து பேசுபொருளாகியிருக்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் தெற்கு மத்திய ரயில்வேயில் ஆயிரத்து 455 கிலோ மீட்டர் தொலைவிற்கு கவச் பாதுகாப்பு சிஸ்டம் பொருத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. மும்பை-டெல்லி இடையேயும், டெல்லி -ஹவுரா இடையேயும் பாதுகாப்பு சிஸ்டம் பொருத்தும் பணிகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிற பகுதிகளிலும் விஸ்தரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இப்போது 3 ரயில்கள் விபத்தில் சிக்கியிருக்கும் பாஹாநாகா பகுதியில் கவச் பாதுகாப்பு சிஸ்டம் பொருத்தப்பட்டிருந்ததா...? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் அப்பகுதியில் கவச் பொருத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்ட மார்க்கத்தில் மட்டும் செயல்பாட்டில் இருப்பதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்