பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - வீட்டிலிருந்து வேலை பார்க்க சொன்ன முதல்வர்... இந்தியாவின் தலைநகருக்கு அடித்த அபாய மணி

x

டெல்லியில் யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி கரைபுரண்டு ஓடும் வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ள நிலையில், அங்கிருக்கும் சூழல் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

எங்கு திரும்பினாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது டெல்லி யமுனா கரையோர பகுதிகள் 3 நாட்களாக தொடர் கனமழையால் ஸ்தம்பித்த டெல்லியில், இப்போது மழையில்லாமல் வெள்ளம் ஏற்பட யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆறு தூர்வாரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்ட, அரியானாவில் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரும் சேர்ந்து வர டெல்லியில் வரலாறு காணாத வகையில் யமுனையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஜூலை 10 ஆம் தேதி யமுனையில் வெள்ளம் ஆர்ப்பறிக்க தொடங்கியது. அன்று காலை 11 மணியளவில் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை தாண்டியது. தொடர்ந்து நீர்மட்டம் வேகம் பிடிக்க, அன்றைய தினமே அபாயக கட்டத்தை தாண்டியது.

தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்க வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் 207.8 மீட்டர் உயரத்திற்கு நீர் சென்றது. இதுவே ஜூலை 13 ஆம் தேதி காலை 7 மணியளவில் நீர்மட்டம் 208.48 மீட்டரை தாண்டியது. இது டெல்லியில் யமுனை கண்டிராத நீர்மட்டமாகும். முன்னதாக கடந்த 1978 ஆம் ஆண்டு யமுனையில் நீர்மட்டம் 207.௪௦௯ மீட்டரை எட்டிருந்தது.

இப்போது இந்த அளவை கடந்து தொடர்ந்து யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்கிறது. யமுனையில் ஓடும் நீர் ஊருக்குள் புகுந்துள்ள நிலையில், மேலும், மேலும் வெள்ளம் அதிகரிப்பதால் நீர் வெளியே செல்ல முடியாத சூழலில் குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்து வருகிறது.

அந்தவகையில் யமுனையையொட்டிய ஜகத்பூர், வசிராபாத், ஹாரிமண்டு, மஜ்னு காதிலா, உஸ்மான்பூர், போட் கிளப், நீம் கரோலி ஆஸ்ரம், மோனாஸ்டரி மார்க்கெட், யமுனா பஜார், பழைய ரயில் நிலையம், கீதா கேட், மில்லினியம் டிப்போ, மயூர் விகார் புஸ்தா, சாராய் காலே கான், பதார்பூர், விஷ்வகர்மா காலணி, ஹாத்தா காலணி ஆகிய இடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

சாலைகள் எல்லாம் வெள்ள நீரால் ஆறுகளாக காட்சியளிக்கிறது

டெல்லி செங்கோட்டைக்குள்ளே வெள்ளநீர் புகுந்துள்ளது

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை களமிறங்கி மீட்பு பணிகள் தொடர்ந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

டெல்லிக்குள் உணவு மற்றும் பெட்ரோல் போன்ற அத்தியாவசிய பொருள்களை ஏற்றி வரும் வாகனங்கள் தவிர்த்து பிற கனரக வாகனங்கள் வர தடை விதிக்கப் பட்டுள்ளது. யமுனா கரை மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டது.

யமுனையில் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அபாயகரமான பகுதிகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க கோரிக்கை விடுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், வெள்ளம் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் ஞாயிற்று கிழமை வரையில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி பிற அரசு பணிகளை செய்வோர் வீட்டில் இருந்தே பணிகளை தொடருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களும் வீட்டிலிருந்து வேலை பார்க்க அனுமதிக்குமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 2015 சென்னை வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் மக்கள் தங்கள் உடமைகளைவிட்டு, கையில் சிக்கிய பொருட்களை வைத்துக் கொண்டு படகுகளில் வெளியேறி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்