முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி... 6,000 கோடியுடன் கம்பி நீட்டிய கும்பல் - நிதி நிறுவனத்திடம் பேரம் - சிக்கிய டிஎஸ்பி

x

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில், நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி 30 லட்ச ரூபாய் பணம் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரை பணியிடை நீக்கமும் செய்திருக்கிறார். இதன் பின்னணியில் என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

வேலூரை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது ஐ.எப்.எஸ் நிதி நிறுவனம்...

இந்த நிறுவனத்தின் கிளைகளாக தமிழகத்தின் பல இடங்களில் ஐ.எப்.ஏஸ் நிதி நிறுவனத்தின் கிளைகள் தொடங்கப்பட்டது...

வழக்கம் போல நிதி நிறுவன டெம்ப்ளேட்டான வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம், முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி என பிரம்மாணட விளம்பரமும் செய்துள்ளனர்....

மக்களும் வழக்கம் போல பணத்தை வாரி கொட்ட, கிட்டதட்ட 80 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் ரூபாய் வரை என வாடிக்கையாளர்கள் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளனர்...

இது தான் சரியான நேரம் என முழுவதையும் வாரி சுருட்டிய நிறுவனத்தினர் தப்பியோடிய சம்பவம் மக்களை பீதியடைய செய்தது....

இந்த மோசடி வழக்கை கையிலெடுத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஒரு குழு அமைத்து வழக்கை விசாரித்து வந்தது...

இந்த வழக்கில் 19 பேரை குற்றவாளிகளாக சேர்த்த போலீசார், அதில் 3 பேரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வந்தனர்...

இதில், குற்றவாளிகள் தொடர்புடைய 31 இடங்களில் சோதனை நடத்திய போலீசார், பலரின் வீடுகளுக்கு சீல் வைத்தும், 1.12 கோடி தங்கம், 34 லட்ச வெள்ளி பொருட்கள், 16 கார்கள் மற்றும் அசையாத சொத்துகளையும் பறிமுதல் செய்தனர்...

இவ்வாறு விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த வழக்கில் விசாரணை அதிகாரியே நிறுவனத்திடம் இருந்து பணம் வாங்கினார் என்ற செய்தி தான் இப்போது பரபரப்பை கிளப்பியிருக்கிறது..

வழக்கை விசாரித்து வந்த குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன், நிறுவனம் மோசடி செய்த விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சுமார் ஐந்து கோடி ரூபாய் பேரம் பேசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது...

இதில், முதற்கட்டமாக நிறுவனத்திடம் இருந்து 30 லட்ச ரூபாய் பெற்றதாக தகவல் வெளியான நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி விசாரணை நடத்த உத்தரவிட்டார்...

விசாரணையில், வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி கபிலன் ஐஎப்எஸ் நிறுவனத்திடம் லஞ்சம் பேரம் பேசியதும், 30 லட்ச ரூபாய் பணம் பெற்றதும் அம்பலமானது...

இதையடுத்து, டிஎஸ்பி கபிலனை பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து, பேரம் பேசிய விவகாரத்தில் டிஎஸ்பி கபிலனுக்கு மட்டும் தான் தொடர்பா...? வேறு சில போலீசாருக்கு ஏதும் தொடர்பிருக்கிறதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்...




Next Story

மேலும் செய்திகள்