"மன்னிப்பு கேட்டு சரி செய்ய முடியாது" - எஸ்.வி.சேகருக்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக எஸ்.வி.சேகருக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
எஸ்.வி.சேகருக்கு எதிராக தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல், ஈபிஎஸ் குறித்து தவறான தகவலை தெரிவித்ததாகவும், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் யூ டியூபில் வீடியோ வெளியிட்டதாகவும் கூறி அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, "ஒருவரின் பேச்சு அல்லது செயல் ஏற்படுத்திய பாதிப்பை மன்னிப்பு கேட்பதன் மூலம் சரிகட்டி விட முடியாது" எனவும், "பதிவுகளை ஃபார்வேர்ட் செய்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் முழு பொறுப்பாவார்" என்றும் தெரிவித்து, பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்க வேண்டுமா வேண்டாமா என்பதை சிறப்பு நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்குகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். அதேசமயம், தேசிய கொடி அவமதிப்பு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.