பூமிக்கு வரும் பேராபத்து.! மனிதகுல வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வு..! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
உலகெங்கும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால், கார்பன்டை ஆக்ஸைட் உள்ளிட்ட பசுமை வாயுக்கள் வெளியேறி புவி வெப்பமயமாயதலை தீவிரப்படுத்தி வருகிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளிலும் இந்த ஆண்டு அதீத வெப்பம் பதிவானது. டெல்லி, பீகார் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் மிகத்தீவிர வெப்ப அலை வீசியது. இந்நிலையில், மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து இதுவரை இல்லாத அளவிற்கு, மிக அதிக வெப்பம் கடந்த ஜூலை 3-ம் தேதி பதிவாகியுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை அமெரிக்காவின் தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டல நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அன்றைய தினம், காற்றின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. புவியின் மேற்பரப்பிலிருந்து 2 மீட்டர் அளவு உயரத்தில் நிலவும் வளிமண்டல காற்றின் வெப்பநிலை கணக்கிடப் பட்டு, காற்றின் சராசரி வெப்பநிலை கண்காணிக்கப்படுகிறது. இதற்கு முன்பு 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும், அதனை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலும் காற்றின் சராசரி வெப்பம்16.92 டிகிரி செல்சியஸ் என்கிற அளவில் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், நடப்பாண்டின் ஜூலை 3 ல்17 டிகிரி செல்சியஸ் அளவை தாண்டி பதிவாகியிருப்பது புவியியல் ஆய்வாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது வழக்கமாக இந்த காலகட்டத்தில் பதிவாகும் வெப்பநிலை யை விட ஏறத்தாழ 0.8 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
உலக வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், உலகின் பல்வேறு பகுதிகளில் மற்றும் கடற்பரப்பில், இனி வரும் காலத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்க கூடும் என்றும், மேலும் 6 வார காலத்திற்கு இதே நிலை தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிகழும் "எல்-நினோ" என்றழைக்கப்படும் புவியியல் நிகழ்வு காரணமாக வெப்பநிலை உயர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனிடையே, அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2023 முதல் 2027ம் ஆண்டுகளுக்கு இடையேயான காலத்திற்குள் ஏதேனும் ஓர் ஆண்டு, உலகம் இதுவரை சந்திக்காத அளவிற்கு கடும் வெப்பமயமான ஆண்டாக பதிவாகும் என்ற தகவல் உலகம் முழுவதும் பெரும் கலக்கததை ஏற்படுத்தியுள்ளது.மேலும் உலகின் சராசரி வெப்ப அளவு, 2027ஆம் ஆண்டிற்குள் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க, அதிக வாய்ப்புள்ளதாகவும் உலக வானிலை மையம் எச்சரித்துள்ளது.