கட்டடமே இல்லாமல் அரசு பள்ளி.. டெய்லி மதியம் லீவு.. - கொந்தளித்த மாணவிகள் நடுரோட்டில்...
நிரந்தர பள்ளிக் கட்டடம் வேண்டி புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடம் சேதம் அடைந்த நிலையில், அங்கு பயின்ற மாணவிகள் குருசுகுப்பத்தில் உள்ள என்கேசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டனர். அடிப்படை வசதிகள் பிரச்சினையால் அவர்கள் திருவிக அரசு ஆண்கள் பள்ளி கட்டடத்தில் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அங்கு மாணவர்களுக்கே போதிய வகுப்பறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவிகளை அப்பள்ளி ஆசிரியர்கள் திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் விரக்தி அடைந்த மாணவிகள் லால் பகதூர் சாஸ்திரி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமாதான பேச்சுவார்த்தைக்கு கல்வித் துறை அதிகாரிகள் யாரும் வராததால் கோபத்தில் மாணவிகள் புதுவை பேருந்து நிலையம் அருகே வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ நேரு பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாணவிகள் அதை ஏற்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் புதிய கட்டடம் திறக்கப்படும் என உறுதியளித்ததால் மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டனர். மாணவிகள் போராட்டம் காரணமாக இன்று ஒருநாள் சுப்ரமணிய பாரதி பள்ளிக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.