கதறும் கடவுளின் தேசம்... கண்ணீர் விடும் 'காந்தாரா' பூமி... என்ன நடக்கிறது கேரளாவில்..?

x

பார்க்குமிடமெல்லாம் பெருக்கெடுக்கும் வெள்ளம், சாலைகளில் கரைபுரளும் மழை நீர், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு, நிலச்சரிவு என பருவமழை தாக்கத்தால் ஸ்தம்பித்து போய் உள்ளது கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள். தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வரும் நிலையில், மழையின் கோரத்தாண்டவத்தில் மக்கள் பரிதவித்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால், அங்குள்ளவர்களை படகு மூலம் நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்லும் பணியும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. கேரளாவில் இடுக்கி, கண்ணூர், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, மற்றும் காசர்கோடு பகுதிகளில் விடாமல் பெய்த மழையால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

இந்த அதீத மழை பாதிப்பால், இதுவரை 8 பேர் உயிரிழந்ததாக சோக செய்திகளும் வெளிவந்துள்ளன. இப்படி பருவமழையில் சிக்கி சின்னாபின்னமாகும் கேரளாவை நோய் தொற்றும் துரத்தி வருகிறது. கடந்த 4 நாட்களில் கேரளாவில் 300க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் 5 பேர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்து 594 பேர் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கேரளாவை தொடர்ந்து, கர்நாடகாவிலும் சக்கை போடு போட்டு வருகிறது மழை. தட்சிண கனடா, உடுப்பி சிக்கமகளூர் குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. தட்சிண கனடா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், உடுப்பி சிக்கமகளூர் குடகு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ள மாவட்ட நிர்வாகங்கள் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரபடுத்தி உள்ளது. மழை காரணமாக கபினி கேஆர்எஸ் ஹேமாவதி ஹாரங்கி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் மழை தீவிரம் எடுத்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழையை எதிர்கொள்ள மாநில அரசுகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராகவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்