இழுத்து சென்ற ராட்சத அலை.. பெங்களூரு சிறுமிக்கு தமிழகத்தில் பயங்கரம் - மேல்மருவத்தூருக்கு யாத்திரை வந்தபோது துயரம்
மேல்மருவத்தூர் கோயிலுக்கு குடும்பத்தோடு ஆன்மீக யாத்திரை வந்த கர்நாடக சிறுமி, மாமல்லபுர கடலில் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து குடும்பம் குடும்பமாக ஆன்மீக யாத்திரைக்காக மேல்மருவத்தூர் வந்துள்ளனர். அதில் 15 வயதான சிறுமி சுமிதாவின் குடும்பமும் ஒன்று. பெற்றோருடன் வந்த சுமிதா, கோயிலில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு இன்று மாமல்லபுரத்தைச் சுற்றிப்பார்க்க சென்றுள்ளார்.
அப்போது கடல் சீற்றத்தை அறியாமல் அனைவரும் கடலில் குளித்துள்ளனர். இச்சூழலில் திடீரென வந்த ராட்சத அலை சுமிதாவை அடித்து இழுத்துச் சென்றுள்ளது. வந்த வேகத்தில் அலை நடுக்கடலுக்குள் சுமிதாவை இழுத்துச் சென்றுவிட்டதால் யாராலும் காப்பாற்ற முடியவில்லை. கண் முன்னே மகள் அடித்து செல்லப்பட்டும் பெற்றோரால் எதுவும் செய்ய முடியவில்லை. உடனடியாக மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த அவர்கள், மாமல்லபுரம் கடலில் சுமிதாவை தேடினர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. உயிரோடு வருவாள் என எதிர்பார்த்த பெற்றோருக்கு பேரதிர்ச்சியை ஏற்பட்டது. 1 மணி நேரம் கழித்து சுமிதாவின் உடல் மட்டுமே கரை ஒதுங்கியது. இருப்பினும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் வந்து, சுமிதாவின் உடலை பரிசோதனை செய்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.
அதன்பின் மாமல்லபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சுமிதா அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். சுமிதா இறந்த துக்கத்தில், யாத்திரைக்கு வந்த மற்ற பக்தர்கள் அனைவரும் சுற்றுலா செல்லும் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு சோகத்தோடு மாமல்லபுரத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியது அனைவரையும் உறையவைத்துவிட்டது.