புஷ்பா பட பாணியில் கஞ்சா கடத்தல் - அதிரடி கைது

சென்னையில், புஷ்பா பட பாணியில் 50 கிலோ கஞ்சா கடத்தி வந்த மொத்த வியாபாரிகள் இருவரை, போலீசார் சாதூர்யமாக செல்பட்டு கைது செய்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
x

சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள அன்னை சத்யா நகரில், கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

அன்னை சத்யா நகரில் கஞ்சா எவ்வாறு விற்பனை செய்யப்படுகிறது? இவர்களுக்கு சப்ளை செய்யும் மொத்த வியாபாரிகள் யார் என கண்டறிய போலீசார் திட்டமிட்டனர். ஆனால், அந்தப் பகுதிக்குள் போலீசார் நுழைந்தாலே சிறுவர்கள் மூலம் வேவு பார்த்து குற்றவாளிகள் உஷாராகி தப்பி வந்தனர்.

எனவே, வேறொரு காவல்நிலையத்தில் இருந்து, கஞ்சா வியாபாரிகள் போல போலீசாரை, அந்தப் பகுதிக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.

அங்கு சென்ற போலீசார், கஞ்சா தரகர்களை அணுகி, நைசாக பேசி, தங்களுக்கு 50 கிலோ கஞ்சா தேவைப்படுவதாகவும், மொத்த வியாபாரியிடம் இருந்து ஆர்டர் செய்து தருமாறும் கோரியுள்ளனர். மேலும், கஞ்சா தரகரை நம்ப வைக்க, கட்டுக்கட்டாக பணத்தையும் காண்பித்துள்ளனர். இதனை உண்மை என நம்பிய அந்த தரகர், மொத்த வியாபாரியை போனில் அணுகி, 50 கிலோ கஞ்சாவை ஆர்டர் செய்துள்ளார்.

50 கிலோ கஞ்சாவுடன் வாகனத்தில் வந்த 2 பேர், கஞ்சா வாங்க காத்திருப்பது வியாபாரிகள் அல்ல, போலீசார் எனக் கண்டறிந்து உஷாராகி விட்டனர். அந்த வாகனத்தை நிறுத்திய போலீசார், கடத்தி வந்த 50 கிலோ கஞ்சாவை கேட்டுள்ளனர். அப்போது தாங்கள் கஞ்சா கடத்தி வரவே இல்லை என அவர்கள் சாதித்துள்ளனர். வாகனம் முழுவதும் போலீசார் சோதனை செய்தபோதும், ஒன்றும் தென்படவில்லை. எப்படியும் வாகனத்துக்குள்தான் கஞ்சா இருக்கும் என விடாப்பிடியாக போலீசார் சோதித்த போதுதான். முன்புறம் உள்ள டேஷ் போர்டு சற்றே வித்தியாசமாக மாட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதனைக் கழட்டிப் பார்த்த போது 50 கிலோ கஞ்சாவும் சிக்கியுள்ளது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், கஞ்சா கடத்தி வந்த நபர்கள், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அணில்குமார், அஞ்சு என்பதும்... புஷ்பா பட பாணியில் கஞ்சாவை இவர்கள் நூதனமான முறையில் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இந்த கும்பலின் நெட்வொர்க் குறித்து அறிய, தொடர்ந்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புஷ்பா பட பாணியில் கடத்தல் காரர்கள் என்னதான் முயற்சி செய்தாலும் போலீஸ்னா ஃபயரு என்பதையே நிரூபித்திருக்கிறது இந்தச் சம்பவம்.


Next Story

மேலும் செய்திகள்