பகலினில் நோட்டம் இரவினில் ஆட்டம் - திருப்பூரில் தொடர்ந்து கைவரிசை காட்டிய கும்பல் - அதிர்ச்சி வீடியோ
தீரன் அதிகாரம் ஒன்று பட பாணியில் பகலில் பகுதிகளை நோட்டமிட்டு, இரவில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒரு சிறுவன் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே தொடர்ந்து காப்பர் வயர்கள் மட்டும் குறி வைத்து திருடப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில், மைவாடி பகுதியில் உள்ள கருப்புசாமி என்பவரது தோட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருடப்பட்டது. இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார், சில நாட்களுக்கு முன்பு மைவாடி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் செல்போன் திருடப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்போது, மடத்துக்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சரக்கு வாகனத்தில் வந்த நால்வரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் காப்பர் வயர்களை வெட்ட பயன்படுத்தப்படும் ஆயுதங்களை போலீசார் கைப்பற்றிய நிலையில், நால்வரிடமும் தங்களின் பாணியில் விசாரணை நடத்தியபோது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். நால்வரும் வேறொரு திருட்டு வழக்கில் சிறையில் இருந்ததால் போலீசாரிடம் சிக்கவில்லை என்பதும், தீரன் அதிகாரம் ஒன்று பட பாணியில் பகலில் பகுதிகளை நோட்டமிட்டு, இரவில் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவர, ஒரு சிறுவன் உட்பட நால்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.