மளிகை கடைக்குள் ரவுடியை மட்டை செய்த கும்பல்...அடுத்த தாதா யார் என்ற போட்டியில் நடந்த பயங்கரம்…
கொல்லப்பட்டவர் வேளச்சேரி பகுதியை சேர்ந்த தினேஷ். வெறி தினேஷ் என்று சொன்னால் அனைவருக்கும் பரிட்சையம். 25 வயதான இவர் வெளியுலகத்தை பொருத்தவரை ஒரு ஆட்டோ டிரைவர். ஆனால் இவரின் முழு நேர வேலை ரவுடிசம். இந்நிலையில் தான் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், சாலையில் நடந்து சென்ற தினேஷை அரிவாள் கத்தியுடன் சுத்து போட்டிருக்கிறது ஒரு கூட்டம். உடனே சுதாரித்துக்கொண்ட தினேஷ் அங்கிருந்து தப்பி ஓடி காமாட்சி மளிகை கடையினுள் புகுந்திருக்கிறார். விடாமல் துரத்திய அந்த கூட்டம் மளிகை கடையில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி இருக்கிறது.
உயிருக்கு பயந்து அனைவரும் தலைதெரிக்க ஓடி இருக்கின்றனர். வெளியே வந்த மளிகை கடை ஓனர், சாதூர்யமாக தினேஷ் மற்றும் மர்ம கும்பலை சேர்ந்த 2 பேரை மட்டும் உள்ளே விட்டு கடையின் ஷட்டரை சாத்தி விட்டு போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். போலீசார் வருவதற்குள் உள்ளே வசமாக சிக்கி கொண்ட வெறிதினேஷை வெறிதீர வெட்டி கொலை செய்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஷட்டரை திறந்து, அந்த இருவரையும் கைது செய்து விசாரனை நடத்தி இருக்கிறார்கள். அப்போது தான் பல ஆண்டுகளாக தொடரும் கெத்து போட்டியில் தினேஷின் உயிர் உருவப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
ஆம்.... கடந்த 2021 ஆம் ஆண்டு, ஆதம்பாக்கத்தில் பெரிய தாதாவாக உருவெடுத்து வந்த நாகூர் மீரானை அவரின் காதலியை வைத்தே பக்காவாக ப்ளான் போட்டு கொலை செய்தார் ரவுடி ராபின். அந்த வழக்கில் ரவுடி ராபின் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நெருங்கிய நண்பனான நாகூர் மீரானை, ரவுடி ராபின் கொலை செய்ய காரணம் ஏரியாவில் யார் கெத்து என்ற போட்டி. மீரானை கொன்று விட்டு விட்டால் இனிமேல் நாம் தான் ஆதம்பாக்கத்துக்கு ராபின்ஹுட் என்று நினைத்த ராபினுக்கு வில்லங்கமாக வந்தவர் தான் குணா. இருவரும் ஒருகாலத்தில் ஒன்றாக கைகோர்த்து பல அசால்டுகளை செய்து, இணை பிரியா நண்பர்களாக மாறி போனவர்கள். ஒருகட்டத்தில் அதே கெத்து ஆசை குணாவையும் ஆட்டிபடைக்க, ராபினை பிரிந்து தனக்கென ஒரு படையை உருவாக்கி இருக்கிறார். அந்த படையின் தளபதி தான் வெறி தினேஷ்.
கடந்த சில வருடங்களாக இரண்டு தரப்புக்கும் வெட்டுகுத்து கலவரம் நடந்து வருகிறது. மீரானை தீர்த்து கட்டியது போல, குணாவின் கதையையும் முடித்து டானாக முடிசூட நினைத்திருக்கிறார் ராபின். தற்போது சிறையில் இருக்கும் ராபின் தனது கூட்டாளிகளான சிசி மணிவண்ணன், ஊசி உதய் ஆகியோரிடம் கூறி குணாவை முடிக்க ஸ்கெட்ச் போட்டு குடுத்திருக்கிறார். அதன்படி குணாவுக்கு போன் செய்து " நீ பெரிய ரவுடினா ஒண்டிக்கு ஒண்டி சிங்கிள்ஸ் செய்ய வாடா" என சண்டையிட அழைத்திருக்கிறார்கள். "இன்னு 3 மணி நேரத்துல உன் மூச்சையே நிறுத்துற பாரு" என குணாவுக்கு நேரம் குறித்திருக்கிறார்கள். இந்த மிரட்டலை குணா தனது நண்பனான வெறிதினேஷிடம் கூறி இருக்கிறார். உடனே சிசிமணிவண்ணனுக்கு குணாவின் லொகேஷனை ஷேர் செய்து "முடிந்தால் என் நண்பனை தொட்டுப்பார்" என சவால் விட்டிருக்கிறார் வெறிதினேஷ். மேலும் வெறிதினேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராபினின் கேங்கில் இருந்து குணாவின் கேங்கிற்கு கட்சி மாறி இருக்கிறார்.
சாவால் விட்ட கோவமும் கட்சி மாறிய துரோகமும் ராபினின் கூட்டாளிகளுக்கு கொலைவெறியை தூண்டியுள்ளது. சம்பவம் நடந்த அன்று குணாவிற்கு குறித்த நேரத்தில் வெறி தினேஷுக்கு சாவு மணி அடித்தது விசாரனையில் தெரியவந்திருக்கிறது. விசாரனைமுடிவில் மணிகண்டன், காமேஷ், ஈஸ்வரன், ஊசி உதய், வசந்த், தினேஷ் ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவாக மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் உருவான கெத்து போட்டி இன்னும் முடியாமல் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது.