அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி? - அதிரடி உத்தரவு போட்ட ஏடிஎஸ்பி
அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக, மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் காவலர் மீது புகார் அளித்ததால், நடவடிக்கை எடுக்குமாறு ஏடிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார்.வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரக்கோணம் காவல் நிலைய காவலர் ரமேஷ் குமார் என்பவர், தனது மகளுக்கு மின்வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக விஜயா என்ற பெண் புகார் அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஏடிஎஸ்பி, விசாரித்து உடனடியாக பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்குமாறு காட்பாடி இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார். பேரணாம்பட்டை சேர்ந்த ராஜா என்பவர், 50 ஆயிரம் கடனுக்காக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வட்டி கட்டுவதாகவும், மேலும் 2 லட்சம் ரூபாய் கேட்டு டீக்காராமன் என்பவர் மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்தார். அணைக்கட்டை சேர்ந்த கோமதி என்பவர் தனது தாய்மாமன் 7 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றி வருவதாக மனு அளித்தார். அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்ட ஏடிஎஸ்பி, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.