61 ஆண்டு வரலாற்றில் முதல் முறை.. சீனாவில் மக்கள் தொகை கடும் சரிவு - கவலையில் அரசு.. ஆபத்து என்ன?
வல்லரசு நாடான அமெரிக்காவிற்கே சவால் விடுத்து வரும் சீனா... தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தால் ஏழை நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் அதிகளவில் கடன் கொடுத்து.... வளைக்க பார்க்கிறது என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகின் பணக்கார நாடாக உருவாவதற்கு முன்பு சீனா பழசாகிவிடும் என வெளியாகி இருக்கும் தகவல் தான் இணையத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு புதிதாக பிறந்தவர்களை விட உயிரிழந்தவர்களே அதிகம் என்பது தான் இந்த பேச்சுக்கு காரணம்.
கடந்த ஆண்டு சீனாவில் புதிதாக 9 லட்சத்து 56 ஆயிரம் பேர் பிறந்துள்ள நிலையில், பத்து லட்சத்து 41 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகை 141 கோடியே 26 லட்சமாக இருந்த நிலையில், அதுவே 2022 ஆம் ஆண்டு 141 கோடியே 17 லட்சத்து ஐயாயிரமாக குறைந்துள்ளது.
இதன் மூலம் 2021 ஆண்டை விட ஒரே ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை 8 லட்சத்து 50 ஆயிரம் குறைந்துள்ளது.
அதோடு, சீனாவில் பெண்களை விட ஆண்களே அதிகம். சீனாவில் மொத்தம் 72 கோடியே 20 லட்சம் ஆண்கள் உள்ள நிலையில், 68 கோடியே 97 லட்சம் பெண்களே உள்ளனர்.
16 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட மக்கள் தொகை என்று எடுத்து கொண்டால் 87 கோடியே 56 லட்சம் பேர் உள்ளனர்.
65 வயதுக்கும் மேற்பட்டோர் என்று எடுத்து கொண்டால் சுமார் 20 கோடியே 98 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
இதற்கு முன்பு கடந்த 1961 ஆம் ஆண்டு மிக மோசமான வறட்சி மற்றும் பட்டினி காரணமாக மக்கள் தொகை குறைந்திருந்ததே அதிகபட்சமாக பார்க்கப்பட்டு வந்த நிலையில்,
61 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதல் முறையாக சீனாவில் மக்கள் தொகை இந்த அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த தம்பதியர் ஒருவர் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள அனுமதித்து வந்த சீனா... 35 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு தம்பதியர் ஒருவர் இரண்டு குழந்தைகள் பெற்று கொள்ள அனுமதி அளித்தது.
இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு தம்பதியர் ஒருவர் மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அரசு.... அதற்காக பல்வேறு சலுகைகளையும்... திட்டங்களையும் வாரி வழங்கியது.
இப்படி பல முயற்சிகளை கையில் எடுத்தும்... இன்று மக்கள் தொகையை அதிகரிக்க முடியாமல் திணறி வருகிறது... இதே நிலை நீடித்தால் 2050 ஆம் ஆண்டு சீனாவின் மக்கள் தொகை 109 கோடியாக சரியும் என கணிக்கின்றன ஐநாவை சேர்ந்த நிபுணர்கள்.