சகோதரர்கள் இடையே நடைபாதை வழி பிரச்சினை...விரக்தியில் தீக்குளித்த தம்பி - கொடைக்கானலில் பரபரப்பு
கொடைக்கானல் கவிதியாகராஜர் சாலையில், காஷ்மீரைச் சேர்ந்த சகோதரர்களான பயாஸ் ராஜா மற்றும் ஷபீர் ராஜா ஆகிய இருவரும், கைவினை பொருட்கள் கடை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தக் கடையின் மேல் தளத்தில் பயாஸ்ராஜாவும், கீழ் தளத்தில் ஷபீர் ராஜாவும் கடை வைத்துள்ளனர். இந்த நிலையில், இந்த இருவருக்கும் இடையே, நீண்ட காலமாக கடைக்கு செல்லக்கூடிய நடைபாதை வழி பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் பிரச்சினை ஏற்படவே, விரக்தியடைந்த ஷபீர் ராஜா, தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஷபீர் ராஜாவுக்கு, ஆபத்தான நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.