கால்பந்து உலகக்கோப்பை தொடர்.. தென் கொரியாவை வீழ்த்தி கானா கலக்கல்
ஃபிஃபா தரவரிசையில் 61வது இடத்தில் இருக்கும் நாடு கானா... மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது கானா சிறிய அணிதான்.. ஆனால் முதல் போட்டியில் கடுமையாகப் போராடிதான் போர்ச்சுகலிடம் கானா வீழ்ந்தது. போர்ச்சுகலால் சுலபத்தில் கானாவை வெல்ல முடியவில்லை...
வெற்றி கட்டாயம்... தோற்றால் வெளியேற்றம்... இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில்தான் எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் தென் கொரியாவுடன் கோதாவில் குதித்தது கானா...
தர வரிசையில் 28வது இடத்தில் இருக்கும் தென் கொரியாவிற்கு ஆரம்பம் முதலே கானா வீரர்கள் போக்கு காட்டினர். கானாவின் கட்டுப்பாட்டில்தான் முதல் பாதியில் பந்து இருந்தது. 24வது நிமிடத்தில் தென் கொரிய வீரர்களுடன் முட்டி மோதி, முகமது சலிஸ் கோல் அடித்து ஆச்சர்யப்படுத்தினார்.
34வது நிமிடத்தில் முகமது கூடஸ், பந்தை தலையால் முட்டி போஸ்ட்டுக்குள் அனுப்ப, 2க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது கானா...
ஆனால் 2வது பாதியில் தென் கொரிய வீரர் ச்சோ கியூ சங், பந்தை தலையால் மோதி அடுத்தடுத்து 2 கோல்கள் அடிக்க, ஆட்டத்தில் அனல்பறந்தது.
இரு அணிகளும் தலா 2 கோல் அடித்து சமனிலை வகித்த நிலையில், 68வது நிமிடத்தில் முகமது கூடஸ் மீண்டும் கோல் அடிக்க கானா கொண்டாட்டத்தில் மூழ்கியது.