ராகுலை தொடர்ந்து... சித்தராமையா, DKS-க்கு புதிய சிக்கல்... "ஆஜராகுங்கள்.." - பறந்தது சம்மன் - பிஜேபி-ன் புதிய ஸ்கெட்ச்

x

ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கின் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

ஏற்கனவே அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழக்க நேரிட்டது. இந்நிலையில், தற்போது அவர் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

அவருடன் சேர்த்து கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் ஆகியோர் மீதும் அவதூறு வழக்கை தொடுத்திருக்கிறார், பாஜக தலைவர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

தேசிய அரசியலில் பெரும் பரபரப்பிற்கும்... எதிர்க்கட்சிகளின் கொந்தளிப்புக்கும் ஆளான இந்த விவகாரத்தின் சூடு தணிவதற்குள் கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, உண்மைக்கு புறமான தகவல்களை கூறி, பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் மீது அவதூறு வழக்கு தொடுத்து இருக்கிறார், பாஜக மாநில செயலாளர் கேசவபிரசாத்.

கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, மே ஐந்தாம் தேதி நாளிதழ்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களில், முந்தைய பாஜக அரசு

40 சதவிகித கமிஷன் ஊழலில் ஈடுபட்டதாகவும், நான்கு ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கொள்ளை யடித்ததாகவும் தெரிவித்திருந்தது.

உண்மைக்கு புறம்பாக காங்கிரஸ் கூறும் இந்த குற்றச்சாட்டுகள் பாஜகவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடியவை என கூறி அவர் தொடர்ந்த வழக்கு விசாரணை, எம்.பி, எம்.எல்.ஏ.களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது.

மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், விசாரணையை ஜூலை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் ஜூலை 27ஆம் தேதி வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக ராகுல் காந்தி சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகிய மூவருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்