"செவிலியர்கள் அலட்சியத்தால் பறிபோன பிஞ்சு உயிர்?" - குழந்தையை மார்பில் அணைத்து கதறும் உறவினர்

x

தனியார் மருத்துவமனை சென்று பிரசவம் பார்க்க பணமில்லாத காரணத்தினால், அரசு மருத்துவமனையை நம்பி வந்த கர்ப்பிணி பெண்ணின் குழந்தை உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முடுக்குத்தரவை கிராமத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன், பவித்ரா தம்பதி. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து, பவித்ரா கர்ப்பமான நிலையில், வறுமையை சமாளிக்க யோகேஸ்வரன் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

நிறைமாத கர்ப்பிணியான பவித்ராவை, அவரது பெற்றோர்கள் கடந்த 2-ஆம் தேதி, ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்ததாக தெரிகிறது. அங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில மணி நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டதாக கூறி குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள், 15 நாட்களாக மருத்துவ பரிசோதனையின் போது நன்றாக இருந்த குழந்தை திடீரென்று இறந்துவிட்டதாக கூறுகின்றனர் என கதறி அழுதனர். மருத்துவர்களோ, குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் உறவினர்கள் குவியத்துவங்கினர். கருவுற்ற நாளில் இருந்து நன்றாக இருந்த குழந்தைக்கு எப்படி மூச்சு திணறல் ஏற்படும் என கேள்வி எழுப்பினர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விளக்கங்கள் அளித்ததாக தெரியவில்லை.

சென்னை அரசு மருத்துவமனையில், குழந்தையின் கை அகற்றப்பட்ட சம்பவம் இன்னும் ஆறாத வடுவாக இருக்கின்றது. அதற்குள் மற்றொரு குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பொறுப்புடன் பணியாற்றி இருந்தால் இது போன்ற சம்பவம் நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் தங்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். மகப்பேறுக்காக வரும் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளில், இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்