OLA காரில் பயணித்த பெண் பாஜக பிரமுகருக்கு நேர்ந்த பயங்கரம்.. டீசல் ஊற்றி எரிக்க முயன்ற ஓட்டுநர் - சென்னையில் அதிர்ச்சி
சென்னை நீலாங்கரையில், ஓலா செயலி மூலம் காரில் சென்ற பெண்ணை, டீசல் ஊற்றி எரிக்க முயன்ற கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
சென்னை பாலவாக்கம் விஜிபி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா. பாரதிய ஜனதா கட்சியில், பாலவாக்கம் மண்டல் செயலாளராக உள்ளார். என்.ஜி.ஓ. ஒன்றிலும் பணியாற்றி வருகிறார்.
இவர், பணி நிமித்தம் காரணமாக, ஆவடி செல்வதற்கு, ஓலா செயலி மூலம் காரை புக் செய்துள்ளார். ஸ்ரீபிரியா புக் செய்த கார், அவர் கூறிய பகுதிக்கு வந்தது. காரில் ஏறி அமர்ந்த ஸ்ரீபிரியா, வழக்கம்போல் ஓடிபி எண்ணை, கார் ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த ஓட்டுநர் ஓடிபி எண்ணை பதிவு செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, ஆவடி செல்வதற்கு, திருவான்மியூர் வழியாக செல்லாமல், எதிர் வழியான சோழிங்கநல்லூர் நோக்கி கார் சென்றுள்ளது.
பயந்துபோன ஸ்ரீபிரியா, என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள் என கேட்க, வாயை மூடிக்கொண்டு வா, இல்லையென்றால் கொன்று புதைத்து விடுவேன் என அந்த கார் ஓட்டுநர் கொலை மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். அதன் பின்னர், தாம்பரம் அருகே உள்ள வேங்கை வாசல் வழியே, குறுக்குப் பாதையில், கார் சென்றுள்ளது.
அப்போது, கார் ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்த ஸ்ரீபிரியா, திடீரென கூச்சலிடவே, கார் நின்றது. பின்னர் காரில் இருந்து இறங்கிய ஓட்டுநர், ஸ்ரீபிரியாவின் செல்போனை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் ஆத்திரமடைந்த ஓட்டுநர், காரின் டிக்கியில் இருந்த டீசல் கேனை எடுத்து வந்து, அவர் மீது ஊற்றி எரிக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதனால் பதறிப் போன ஸ்ரீபிரியா மீண்டும் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த முதியவர் ஒருவர், அங்கு ஓடி வந்து கார் ஓட்டுநரை தடுத்துள்ளார்.
அதனைப் பயன்படுத்தி, அங்கிருந்து தப்பிய ஸ்ரீபிரியா, செல்போன் மூலம் காவல் ஆணையர் அலுவலத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், தொழில்நுட்ப உதவியுடன் கார் ஓட்டுநரை கைது செய்தனர்.