சதி திட்டம் தீட்டி தந்தை கொலை.. கொள்ளி வைக்கும்போது சிக்கிய மகன் -நம்பர் பிளேட்டால் தண்டித்த "கர்மா"

x

கரூர் அருகே முன்விரோதம் காரணமாக தந்தையை கொலை செய்து விட்டு, இறுதி சடங்கு செய்ய அப்பாவி போல் வந்து நின்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர்...

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த கொறவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்.

57 வயதான இவர் ஹிட்டாச்சி வாகனம் மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்களை வைத்து தொழில் செய்து வந்துள்ளார்.

தங்கராஜின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த கணவனை இழந்த வேறொரு பெண்ணுடன் தங்கராஜ் உறவில் இருந்து வந்துள்ளார்.

இதனால், தாந்தோணிமலை பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த மகன் மோகனசுந்தரம் மற்றும் தங்கராஜ் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

அத்துடன், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.

பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நினைத்த மோகனசுந்தரம், தனது மாமா உறவின் முறையில் இருக்கும் மகாசாமி என்பவருடன் சேர்ந்து தந்தை தங்கராஜை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளார்.

அதன்படி, அதிகாலை நேரத்தில் தந்தை வரும் வழியில் தண்ணீர் டேங்கர் லாரியுடன் மோகனசுந்தரம் காத்திருந்துள்ளார்.

மோகனசுந்தரம் கணக்கிட்ட படி தங்கராஜ் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த போது, டேங்கர் லாரியின் மூலம் இடித்து விபத்து போன்று கொலை செய்துள்ளனர்.

தம்மநாயக்கன்பட்டி பிரிவு சாலையில், நடந்த இந்த சம்பவத்தில் தங்கராஜ் துடிதுடிக்க உயிரிழந்துள்ளார்

நினைத்தது நிறைவேறியது என அங்கிருந்து புறப்பட்ட மோகனசுந்தரம், தந்தையின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் ஒன்று தெரியாததுபோல், தனது குடும்பத்துடன் வந்துள்ளார்.

இதனிடையே உறவினர்கள் எழுப்பிய சந்தேகத்தின் பேரில் வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போது, டேங்கர் லாரியின் நம்பர் பிளேட் கீழே கிடந்தது தெரிய வந்துள்ளது.

அதை சோதனை செய்து பார்த்ததில் மோகனசுந்தரம் சொந்த அப்பாவையே வாகனத்தை ஏற்றி கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மோகனசுந்தரம் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மகாசாமியை கைது செய்த போலீசார், காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்