மன உளைச்சலில் மருத்துவரான 'இன்ஜினியர்'.. கூகுள் பார்த்து ஊருக்கே மருத்துவம்.. ராசியான டாக்டர் என குவிந்த மக்களுக்கு அதிர்ச்சி

x

தஞ்சாவூரை சேர்ந்தவர் மருத்துவர் செம்பியன். ரஷ்யாவில் மருத்துவம் படித்த இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்கிறார்.

இதன் பின் டெல்லியில் மருத்துவர் பணி, அதுபோக குஜராத்தில் முதுநிலைப்படிப்பு என சில வருடங்கள் பிஸியான இவர், தனது முதுநிலைப்படிப்பை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முயற்சித்துள்ளார். அப்போது, அவரால் அதனை பதிவு செய்ய முடியவில்லை.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் வழங்கப்படும். ஆனால், செம்பியனுக்கு வழங்கப்பட்ட ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை பயன்படுத்தி அவரால் பயன்படுத்த முடியவில்லை.

இதனால், குழப்பமடைந்த செம்பியன் இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு மின்னஞ்சல் மூலம் புகாரளித்திருக்கிறார்.

இந்நிலையில், செம்பியனின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, அது தவறானது என காட்டி இருக்கிறது....

இதையடுத்து, சென்னை சைபர் கிரைம் போலீசாரை செம்பியன் நாடிச் சென்ற நிலையில், விசாரணையில் பொறியியல் இளைஞர் ஒருவரின் தில்லாலங்கடி ஆட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த புகாரின் தீவிர விசாரணையில் இறங்கிய அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிடம் இருந்து மருத்துவர் செம்பியனின் ரிஜிஸ்ட்ரேஷன் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட விவரங்களை கேட்டு பெற்றுள்ளனர்.

அதில், மருத்துவர் செம்பியனின் செல்போன் எண்ணில் ஒருவர் பதிவு செய்திருப்பதும், அவரின் பெயரும் செம்பியன் என்பதை அறிந்து போலீசார் குழப்பமடைந்தனர்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார் தரமணி காவல் நிலையம் அருகே உள்ள குடும்ப நல மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்த செம்பியனை பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.

அதில், சீர்காழியை சேர்ந்த அவர், 2012 ஆம் ஆண்டு ஏரோனாட்டிக்கல் இன்ஜீனியரிங் படித்து முடித்ததும், 2019 ஆம் ஆண்டில் கொரோனாவால் வேலை இழந்ததும் தெரியவந்துள்ளது.

அப்போது, மருத்துவர்களுக்கு தேவை அதிகம் இருப்பதை அறிந்த அவர், மோசடி எண்ணத்திற்கு அடி போட்டுள்ளார் செம்பியன்.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தளத்தை செக் செய்த போது, தன்னுடைய செம்பியன் என்ற பெயரில் மூன்று மருத்துவர்கள் பதிவு செய்திருப்பதை கண்டிருக்கிறார். அதில், இருவரின் வயது பொருந்தாத நிலையில் ரஷ்யாவில் மருத்துவம் படித்த செம்பியனின் பெயரில் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

இதை வைத்து பல மருத்துவமனைகளில் மருத்துவராக நடித்து பணியாற்றி வந்த இவரிடம், எந்த ஒரு மருத்துவமனையும் சான்றிதழ்கள் கேட்காதது அதிர்ச்சியான ஒன்றே...

மருத்துவ பரிந்துரை தொடர்பாக வரும் மக்களிடம் கூகுளில் தேடி மருந்துகள் பரிந்துரை செய்தும், மருத்துவ குறிப்புகள் வழங்கியும் 5 வருடமாக தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இதில், மருத்துவர் செம்பியன் பணி சம்பந்தமாக டெல்லி மற்றும் மேல்படிப்புக்காக குஜராத் சென்ற நேரங்களில் இந்த பொறியியலாளர் செம்பியன் இங்கு போலி மருத்துவராக வலம் வந்தது அம்பலமான நிலையில், போலி செம்பியனை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்