மூதாட்டியை ஏமாற்றி நகை பணம் பறிப்பு… இலவச சேலை தருவதாக ஆசைக்காட்டி மோசடி…

x


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி சரோஜா…

பத்து வருடங்களுக்கு முன்பு அமைந்தகரை பகுதியில் மகளுடன் வசித்து வந்துள்ளார். அப்போது அமைந்தகரை வீட்டு விண்ணப்பத்தை பேங்கில் கொடுத்து முதியோர் உதவி தொகைக்கு பதிவுச் செய்திருக்கிறார்.

சில வருடங்களில் மகளும் இறந்துவிட்டதால் சொந்த ஊருக்கே சென்றிருக்கிறார் சரோஜா. ஆனால், அவரது பென்ஷன் பணம் அட்டையிலுள்ள முகவரி மட்டும் மாற்றாமல் அப்படியே இருந்துள்ளது.

இதனால் இரண்டு மாதத்திற்கு ஒருமறை மூன்று மாதத்திற்கு ஒருமுறை அமைந்தகரைக்கு வந்து பென்ஷன் பணத்தை மொத்தமாக எடுத்துச் சென்றிருக்கிறார் சரோஜா…

சம்பவத்தன்றும் பேங்கிலிருந்து 44 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பணத்தை எடுத்த சரோஜா பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பணத்தை எண்ணிக்கொண்டே நடந்து சென்றிருக்கிறார்…

மூதாட்டி கையில் பணத்துடன் செல்வதை நோட்டமிட்ட சுந்தர் என்ற ஆட்டோ டிரைவர் பணத்தை ஆட்டையபோட திட்டம்தீட்டியிருக்கிறார்.

உடனே கடையிலிருந்து ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கி கொண்டு சரோஜாவிடம் சென்றவர், நீங்கள் என்னுடைய பாட்டி போலவே இருக்குறீர்கள் என்று கண்கலங்க கம்பிகட்டியிருக்கிறார்.

ஆட்டோ டிரைவரின் சென்டிமென்ட் வார்த்தைகளில் மனம் உருகிபோன சரோஜா உணவை வாங்கி மேற்கொண்டு பேச்சுகொடுக்க தொடங்கியிருக்கிறார்.

மூதாட்டி தன் வலையில் விழுந்ததை உணர்ந்த சுந்தர் சேத்துப்பட்டு பகுதியிலுள்ள ஒரு பங்களா வீட்டில் மூதாட்டிகளுக்கு இலவச சேலையும் ஆயிரம் ரூபாய் பணமும் கொடுப்பதாக கூறியிருக்கிறார்.

இதை நம்பி சரோஜாவும் சேத்துப்பட்டு பகுதிக்கு சுந்தரின் ஆட்டோவிலேயே சென்றிருக்கிறார்.

ஆட்டோவும் நேராக சேத்துபட்டு பகுதியிலுள்ள ஓர் வீட்டிற்கு முன்பு நின்றிருக்கிறது.அப்போதுதான் கையில் பணம் கழுத்தில் நகையுடன் சென்றால் உதவிதொகை கொடுக்கமாட்டார்கள் என மூதாட்டியை குழப்பியிருக்கிறார் சுந்தர்.

சரோஜாவும் கழுத்திலிருந்த நகை மற்றும் பணத்தை ஆட்டோவிலேயே வைத்துவிட்டு அந்த வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.

ஆனால், வீட்டிலிருந்தவர்கள் சேலையெல்லாம் வழங்கவில்லை யாரோ பொய்யான தகவலை தெரிவித்திருக்கிறார்கள் என்று சரோஜாவிடம் கூறியிருக்கிறார்கள். சரோஜாவிற்கு தூக்கிவாரி போட்டிருக்கிறது.

ஓடி வந்து வெளியே பார்த்திருக்கிறார். ஆட்டோவும் இல்லை… அழைத்துவந்த சுந்தரும் நகை பணத்துடன் மாயமாகியிருக்கிறார்…

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரோஜா சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார்கொடுத்திருக்கிறார்.மூதாட்டியின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து ஆட்டோவை டிராக் செய்திருக்கிறார்கள். அப்போது தான் சுந்தர் என்பவர் சிக்கியிருக்கிறார்.

ஆட்டோ ஓட்டுநரான சுந்தருடைய முழு நேர வேலையே கொள்ளையடிப்பது தான். சரோஜாவிடம் ஏமாற்றிய அதே பாணியில் 20க்கும் மேற்பட்ட மூதாட்டிகளிடம் கைவரிசை காட்டியிருக்கிறார் சுந்தர்.

இவர் மீது எராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.சுத்தரை சுற்றுபோட்ட போலீசார், அவரிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்