அட்லாண்டிக்கின் மிரட்டும் காரிருள்... வெடித்து சிதறிய டைட்டானிக் நீர்மூழ்கி -ஆழ்கடலில் களமிறங்குமா அமெரிக்க Curv-21?

x

அட்லாண்டிக் ஆழ்கடலில் உடைந்த டைட்டானிக் நீர்மூழ்கியை மீட்க முடியுமா? அதற்கு சாத்தியம் உள்ளதா...? என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

அட்லாண்டிக் ஆழ்கடலில் 12 ஆயிரத்து 400 அடி ஆழத்தில் கிடக்கிறது டைட்டானிக் கப்பல்... ஆயிரத்து 500 பேரை பலிகொண்ட கப்பலை பார்க்க சுற்றுலா அழைத்து செல்வதாக கூறிய ஓஷன்கேட் நிறுவனம், 5 கோடீஸ்வரர்களை டைட்டானிக் நீர்மூழ்கியில் இறக்கி உயிர்பலியை வாங்கியிருக்கிறது.

போதிய பாதுகாப்பு கட்டமைப்பு இல்லாத நீர்மூழ்கி, ஆழ்கடலில் அழுத்தம் தாங்காமல் உடைந்துவிட்டது, சுற்றுலா சென்ற 5 பேரும் உயிரிழந்துவிட்டார்கள் எனக் கூறிவிட்டது அமெரிக்க கடலோர காவல்படை. இதுதொடர்பாக விசாரணையை கனடா தொடங்க, ஆழ்கடலில் நீர்மூழ்கியில் இறந்தவர்களை மீட்பது சாத்தியமா...? என்ற கேள்வி எழுகிறது.

இந்த கேள்விக்கு அது அவ்வளது எளிதான காரியம் இல்லை என்பதே கடல் ஆராய்ச்சியாளர்கள் பதிலாக இருக்கிறது. அட்லாண்டிக்கில் சுமார் 4 கி.மீ. ஆழத்தில் நீர்மூழ்கி கிடக்கிறது... டைட்டானிக் கப்பல் 12 ஆயிரத்து 400 அடி ஆழத்தில் கிடக்கும் சூழலில், டைட்டானிக் நீர்மூழ்கி சிதைவுகள் அதற்கு ஆயிரத்து 600 அடி ஆழத்தில் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டுக்கு மேலாக டைட்டானிக் மூழ்கிக்கிடக்கும் இப்பகுதி நள்ளிரவு மண்டலமாக இருக்கிறது. உறைய வைக்கும் குளிர், கருமையான இருளைக் கொண்டிருக்கும்,

நீர் அழுத்தம் அதிகமாக இருக்கும். நீர்மூழ்கி விளக்கு வெளிச்சத்தை தாண்டிய இருள், எதுவும் தெரியாத வகையில் இருக்கும்... இப்படிப்பட்ட சூழலில் டைட்டானிக் நீர்மூழ்கி சிதைவுகள் மற்றும் இறந்தவர்களை மீட்பது சாத்தியமா என்றால் சாத்தியமற்றது என்றே சொல்கிறார்கள் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள்.

அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரி ஜான் மாகர் பேசும் போது, நீர்மூழ்கி சிதைவுகள் அது எத்தகைய பேரழிவை சந்தித்திருக்கிறது என்பதை காட்டுகிறது, ஆழ்கடல் அடிவார சூழல் நம்ப முடியாதது, பணியை தொடர்வோம், சிதைவுகள், உடல்களை மீட்க வாய்ப்புகளுக்கான பதில் இப்போது இல்லை என தெரிவித்துவிட்டார்.

கிட்டத்தட்ட மீட்க வாய்ப்பு இல்லை என்பது போலவே அவரது பேச்சு இருந்தது. இது கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் தரப்பிலும் ஆமோதிக்கப்படுகிறது. ஆழ்கடல் அழுத்தம் அத்தனை அபாயமான என்கிறார்கள். அடியில் போய் யாரும் சடலங்கள், சிதைவுகளை எடுத்து மற்றொரு நீர்மூழ்கியில் வைத்துவிட முடியாது, கடற்படை நீர்மூழ்கிகளாலும் அவ்வளவு ஆளத்திற்கு செல்ல வாய்ப்பில்லை என்ற கூற்றையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.

இப்போதைய சூழலில் ரிமோர்ட் மூலம் இயக்கும் வாகனங்களை வேண்டுமானால் கடலில் இறக்கி முயற்சி செய்யலாம் என்ற கூற்றை முன்வைக்கிறார்கள். சில வாகனங்களால் கடலில் அவ்வளவு ஆளத்திற்கு செல்ல முடியும் என சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அந்த வகையில் அமெரிக்கா கடற்படையின் Curv-21 மீது அவர்களது பார்வை திரும்புகிறது.

Curv-21 வாகனம் ஆழ்கடலில் சிதைவுகளை மீட்பதற்காக உருவாக்கப்பட்டது. அதனால் 20 ஆயிரம் அடி ஆழத்திற்கும் கீழ் செல்ல முடியும். 27 ஆயிரம் கிலோ எடையை தூக்கிவர முடியும். 2022 ஆம் ஆண்டு தென் சீனக் கடலில் விமான சிதைவுகளை Curv-21 மீட்டு வந்தது. அப்போது 12 ஆயிரத்து 400 அடி ஆழத்திலிருந்து கப்பல் சிதைவுகளை தூக்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இப்போது இதை ஏற்றி, இறக்கவும், இயக்கவும் மேல்பரப்பில் பரந்த கப்பல் சேவையும், கேபிள்களும் இருக்க வேண்டும். கேபிள்கள் சிதைவோடு இணைக்கப்பட வேண்டும்... இதெல்லாம் சவால்கள் நிறைந்ததே என்கிறார்கள் கடல்சார் ஆராய்ச்சியாளர்கள்..


Next Story

மேலும் செய்திகள்