9-ஆம் வகுப்பில் இருந்து 10-ஆம் வகுப்பில் சேர நுழைவுத் தேர்வு - ஆசிரியர் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கை
9-ஆம் வகுப்பில் இருந்து 10-ஆம் வகுப்பில் சேர நுழைவுத் தேர்வு - நுழைவுத்தேர்வை ரத்து செய்ய ஆசிரியர் நல கூட்டமைப்பு கோரிக்கை
அரசு மாதிரி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பில் சேருவதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் சேர்வதற்காக, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 4-ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது உண்மையாகவே வருந்தத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். மருத்துவ படிப்பிற்கே நீட் வேண்டாம் என்று நாம் போராடும்போது, அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு என்பது தேவையில்லாத ஒன்று என்றும், மாதிரி பள்ளி என்ற பெயரில் மற்ற அரசு பள்ளிகளை நாமே தரம் பிரித்து பார்ப்பதாக உள்ளது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஏழை மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தாமல் குலுக்கல் முறையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.