அமலாக்கத்துறை அதிகாரி வாக்குமூலம் - இறுதியில் ட்விஸ்ட் வைத்த நீதிபதி அல்லி

x

அமைச்சர் செந்தில் பாலா ஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று பிறப்பிக்கிறது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கோரி, அமலாக்க பிரிவினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரிடம் அமலாக்க பிரிவினர் தாக்கல் செய்த மனு கிடைத்ததா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு செந்தில் பாலாஜி இல்லை என தெரிவித்ததை அடுத்து மனுவை கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளும்படி நீதிபதி அல்லி அறிவுறுத்தினார். தொடர்ந்து நடந்த வாதத்தில், வழக்கில் உண்மையை வெளி கொண்டுவர செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், கேட்டுக்கொண்டார்.

இந்த வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ

கடந்த 13 ஆம் தேதி காலை 7 மணி முதல் 14 ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளதால் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது என்று வாதிட்டார். மேலும் இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவு குறித்தும் முதன்மை அமர்வு நீதிபதி அல்லியிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக உள்ள அமலாக்க பிரிவின் துணை இயக்குனர் கார்த்திக் தாசரி கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் தனது வாக்குமூலத்தை அளித்தார்.

இறுதியாக அமலாக்கப் பிரிவினர் 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு குறித்து செந்தில் பாலாஜியின் விருப்பம் குறித்து நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் விருப்பமில்லை என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்வதற்காக மனு மீதான விசாரணையை இன்று வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்ததோடு, அமலாக்க பிரிவினரின் மனு மீது இன்றைய தினமே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்