End- இல்லாத வன்முறை...பிரிகிறதா மணிப்பூர் மாநிலம்..?
ஒரு மாதம் கடந்தும் ஓயாத வன்முறையால்.. கலவர பூமியாக காட்சியளித்து வருகிறது, இந்தியாவின் வடகிழக்கு மாநில மான மணிப்பூர். கல்வியிலும் சரி... வசதியிலும் சரி... தங்களை விட வசதி படைத்தவர்களாக இருக்கும் மைதேயி மக்களை பழங்குடியினராக அறிவிக்க கூடாது... என குகி மக்கள் தெரிவித்த எதிர்ப்பு.. தற்போது முடிவு பெறாத வன்முறையில் வந்து நிற்கிறது. கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் நேரில் சென்ற பிறகும் கூட... மணிப்பூரில் அமைதி திரும்பிய பாடில்லை.
இந்நிலையில், மணிப்பூரில் 90 சதவீதம் நிலப் பகுதிகளைக் கொண்டு... மலைப்பகுதியில் வசித்து வரும் குகி மக்கள்... இந்த விவகாரத்தில் தங்களுக்கு அநீதி இழைக்கப் பட்டிருப்பதாக கருதுகிறார்கள். 60 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூரில்... குகி மக்களின் பிரதிநிதியாக இருக்கும் 7 பாஜக எம்.எல்.ஏக்கள் உட்பட 10 எம்.எல்.ஏக்களும் பாஜக அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். ஒரு மாதம் கடந்தும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், பிரதமரை சந்தித்து தங்களது தனி மாநில கோரிக்கையை வலியுறுத்த முடிவு செய்திருக்கிறார்கள், குகி எம்.எல்.ஏக்கள்.
தனிமாநிலம் அல்லது அண்டை மாநிலமான மிசோரத்துடன் மணிப்பூரின் மலைப்பகுதியில் வாழும் தங்களை இணைக்குமாறு அவர்கள் வலியுறுத்தி வருவது, மணிப்பூர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுமா ? என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறது. இந்நிலையில், மணிப்பூரில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும்... வன்முறையை காரணம் காட்டி மணிப்பூரை இரண்டாக பிரிக்க கூடாது என மற்றொரு அண்டை மாநிலமான திரிபுராவில் வசித்து வரும் மைதேயி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னொரு புறம் மணிப்பூர் இன வன்முறைகள் தொடர்பாக அம்மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைத்துள்ள 51 பேர் கொண்ட அமைதிக் குழுவில் பாஜக முதல்வர் பைரோன்சிங் மற்றும் அமைச்சர்கள் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த குழுவில் இடம்பெற முடியாது என குகி மக்கள் புறக்கணித்துள்ளனர்.
அதே வேளையில், மணிப்பூரில் இரு பிரிவினருக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஏற்படுத்த மத்தியஸ்தராக அசாம் மாநில முதலமைச்சர் பிஸ்வா சர்மாவை பாஜக நியமித்துள்ள நிலையில், கடந்த மூன்று வாரங்களாக மணிப்பூரில் முகாமிட்டு வரும் பிஸ்வா சர்மா இந்த விவகாரத்தில் தங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை எட்டி தருவார் என, குகி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.