இது ரயில் நிலையமா? விமான நிலையமா? பளபளக்கப் போகுது எழும்பூர் ஸ்டேஷன் - உலகத்தரத்தில் புது பிளான்

x

எழும்பூர் ரெயில் நிலையம்... சென்னை-தென் மாவட்ட மக்களுடன் ஒன்றிப்போன பாரம்பரிய கட்டிடம். 1908 ஆம் ஆண்டு 17 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட ரெயில் நிலையம்...

இன்று 11 நடைமேடைகளுடன் பிரமாண்டமான ரெயில் நிலையமாக காட்சியளிக்கிறது. பாரம்பரிய கட்டுமானங்கள் இன்றளவும் மிடுக்குடன் அனைவரும் பார்த்து பிரமிக்கும் வகையில் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தை 760 கோடி ரூபாயில் மறுசீரமைக்க ரெயில்வே முடிவு செய்தது. அதற்கான பணிகளும் தொடங்கியிருக்கிறது...

பழமையான கட்டிடத்துக்கு அருகில் புதுப்பொலிவுடன் பிரமாண்டமாக உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் 2 நுழைவுவாயில்கள் உலகத்தரத்திலான வசதிகளுடன் கட்டப்பட உள்ளன. அதில் ஒன்று காந்தி இர்வின் சாலை பகுதியிலும், மற்றொன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியிலும் வருகிறது. அதாவது ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டருக்கு ரெயில் நிலையக் கட்டிடம் அமையவிருக்கிறது.

இருபுறமும் கட்டப்படும் 3 மாடிகளை கொண்ட கட்டிடங்களில் டிக்கெட் கவுண்ட்டர், காத்திருப்பு அறை, அலுவலகம், கடைகள், ஓய்வு அறைகள் அமைய உள்ளன. கழிவறைகள், குடிநீர் வசதி, மேற்கூரைகள், இருக்கைகள், லிஃப்ட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட இருக்கின்றன. அஞ்சல் அலுவலகம், பார்சல்களை கையளும் தளம் அமைகிறது.

ஒட்டுமொத்தமாக ஒரு விமான நிலையம் போல் ரெயில் நிலையம் மாறவிருக்கிறது. ரெயில் நிலையத்திற்கு வாகனம் சிரமமின்றி வந்துசெல்ல வெளிவளாகப் பகுதி அமைய இருக்கிறது.

ரெயில் நிலையத்துக்கு அருகில் காந்தி இர்வின் சாலை, பூந்தமல்லி சாலை பகுதியில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு ஏற்றவாறு பல அடுக்கு வசதி கொண்ட புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இங்கு 2, 3 மற்றும் 4-வது தளங்களில் வாகனங்கள் நிறுத்தும் வசதி கொண்டுவரப்படுகிறது.

இந்த மறுசீரமைப்பு பணிகளை செய்ய ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பணிகளை 36 மாதத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்போது நிலப்பரப்பு தேர்வு, மண் பரிசோதனை, கழுகு பார்வை கணக்கெடுப்பு, ரெயில்வே குடியிருப்புகளை அகற்றுவது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்