காதல் திருமணம் செய்த பெண்...பிஞ்சு குழந்தையுடன் வீதியில் விட்ட குடும்பம் - அடுத்தடுத்து வெளிவந்த கொடூரம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வரதட்சணைக் கொடுமையால், பச்சிளங் குழந்தையுடன் பேருந்து நிலையத்தில் பெண் பரிதவித்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கீரப்பட்டியைச் சேர்ந்த பிரசாந்தும் குடியாத்தத்தைச் சேர்ந்த கீதாவும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்கு முன்பு வரதட்சணைக் கேட்டு பிரசாந்த் குடும்பத்தினர், கீதாவை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பியதாகவும், இது தொடர்பாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், மீண்டும் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், வரதட்சணை கேட்டு பிரசாந்த் குடும்பத்தினர் கீதாவை மீண்டும் கொடுமைப்படுத்தியதாகவும், பேருந்து நிலையத்திலேயே விட்டுச் சென்றதாகவும் தெரிகிறது. பிறந்து 20 நாட்களே ஆன குழந்தையுடன் கீதா அரூர் பேருந்து நிலையத்தில் பரிதவித்துள்ளார். தகவலறிந்த போலீசார், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தனது மாமியார் வரதட்சணை கேட்டு தொடர்ந்து தொந்தரவு தருவதாக கீதா குற்றம்சாட்டி உள்ளார்.