அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கா?.. சட்டப்பிரிவு 164 சொல்வது என்ன? -டெல்லி சொல்லும் பாடம்

x

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் உள்ளதா என்பது பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததும், செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாதா அமைச்சராக தொடர்வதை ஏற்று கொள்ளமுடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி... இதற்கு பதிலடியாக இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது.

இப்படி செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த உத்தரவும் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது என உத்தரவிட்டது. அமைச்சரை நீக்க வேண்டும் என ஆளுநர் எங்கு சொல்லியிருக்கிறார் என கேட்ட நீதிபதிகள், வழக்கை சந்திப்பதற்காக தகுதி இழப்பு ஆகவில்லை என்றும், 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டால் மட்டுமே தகுதி இழப்பு ஆகிறது என தெரிவித்தனர். வழக்கை ஜூலை 7 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை உடனடியாக நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை எனக் கூறியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரின் அறிவிப்பை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

ஒரு மாநில அமைச்சரவை நியமனம் குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 164 விவரிக்கிறது. ஒரு மாநில முதலமைச்சரை ஆளுநர் நியமனம் செய்வார், மற்ற அமைச்சர்களை முதலமைச்சர் பரிந்துரையில் ஆளுநர் நியமனம் செய்வார், ஆளுநரின் விருப்பமுள்ளவரை அமைச்சர்கள் பதவி வகிக்க முடியும் என்கிறது பிரிவு 164... இதில் ஆளுநரின் விருப்பம் என்பது முதலமைச்சர் விருப்பமாகும். சட்டத்தில் Pleasure of Governor என்பதை முதலமைச்சரின் விருப்பம் அல்லது அதிகாரம் என்றே பல வழக்குகளில் விளக்கப்பட்டுள்ளது.

1974-ல் பஞ்சாப் மாநில அரசு சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணையை மேற்கொண்ட 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பெயரிலே ஆளுநர் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டது.

அரசியலமைப்பு சட்ட நிபுணரும், மக்களவை முன்னாள் செக்ரட்டரி ஜெனரல் பி. டி. தங்கப்பன் ஆச்சார்யாவும், முதலமைச்சர் பரிந்துரையே முக்கியம் என்கிறார்.

டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினை 2022 மே மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது அவரது இலாகாவை சிசோடியாவிடம் ஒப்படைத்தார் முதலமைச்சர் கெஜ்ரிவால்.. அப்போது சத்யேந்திர ஜெயின் அமைச்சரவையில் நீடிக்கக்கூடாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2022 ஜூலையில் விசாரணையை மேற்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், குற்றப் பின்னணி கொண்டவர் அமைச்சரவையில் தொடர வேண்டுமா...? வேண்டாமா...? என்பதை முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. தொடர்ந்து 9 மாதங்கள் கெஜ்ரிவால் அமைச்சரவையில் தொடர்ந்து நீடித்த சத்யேந்திர ஜெயின், கடந்த பிப்ரவரியில் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கம் செய்திருக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் என்ன உத்தரவை பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக கூட்டணி கட்சிகள், ஆளுநர் சட்டத்தை புறம்தள்ளி அரசியல் செய்கிறார் என குற்றம் சாட்டுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்