முந்திக்கொண்ட திமுக கூட்டணி.. இடியாப்ப சிக்கலில் அதிமுக கூட்டணி - நொடிக்கு நொடி இடைத்தேர்தல் பரபரப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக்கு மத்தியில் களமிறங்க காத்திருக்கும் கட்சிகளால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு...
முந்திக்கொண்ட திமுக கூட்டணி.. இடியாப்ப சிக்கலில் அதிமுக கூட்டணி - நொடிக்கு நொடி இடைத்தேர்தல் பரபரப்பு..!
x


காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது... ஜனவரி 31 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில், வேட்பாளரை இறுதி செய்வதற்கான ஆலோசனையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுகின்றன. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு போட்டியிடும் வேட்பாளரை 2 நாட்களில் காங்கிரஸ் தலைமை வெளியிட உள்ளது.

மறுபுறம் அதிமுக கூட்டணியில் 2021 தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. இப்போதும் மீண்டும் த.மா.கா.வுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? அல்லது அதிமுகவே போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. உட்கட்சி பிரச்சினையால் இரட்டை இலை சிக்கலில் சிக்கும் என்பதால், அதிமுக தமாகாவை போட்டியிட செய்யலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய ஜி.கே. வாசன், விரைவில் கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார். மறுபக்கம் தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக, ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆலோசனையில் களமிறங்கி உள்ளனர். கமல்ஹாசன் ஜனவரி 23 ஆம் தேதி ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து முடிவு செய்து அறிவிப்பு வெளியாக உள்ளது. தேமுதிக சார்பிலும் அன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

இதேபோல் ஓ.பி.எஸ் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் உடன் ஜனவரி 23 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். சென்னையில் நடக்கும் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பிலும் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்தும் கட்சியின் தலைமை ஆலோசித்து வருவதால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்